விக்ரம் லேண்டரின் மின்னாற்றல் குறைந்து கொண்டே வருகிறது

சந்திரயான்-2 விண்கலம் கடந்த ஜூலை 22 ஆம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது. விண்ணில் செலுத்தப்பட்ட அதே நாளில் புவி வட்டப்பாதையிலும் விண்கலம் நிலைநிறுத்தபட்டது. அடுத்தடுத்த நாட்களில் ஒவ்வொரு நிலையாக அதிகரிக்கப்பட்டு விக்ரம் லேண்டர் செப்டம்பர் 7 ஆம் தேதி அதிகாலை நிலவில் தரையிறங்கத் திட்டமிட்டிருந்த நிலையில் 2 கிலோ மீட்டர் தொலைவே இருந்த போது, லேண்டருக்கும் நிலையத்துக்குமான தொடர்பு துண்டிக்கபட்டது என இஸ்ரோ தலைவர் சிவன் வருத்தத்துடன் அறிவித்தார்.

இதனிடையே தகவல் தொடர்பை இழந்த விக்ரம் கண்டறியபட்டுள்ளதாகவும், ஆர்பிட்டர் மூலம் விக்ரம் லேண்டரைக் கண்டறிந்ததாகவும் தகவல் தொடர்பை மீட்கும் பணியில் முழு முயற்சியில் ஈடுபட்டு வருவதாகவும் இஸ்ரோ தெரிவித்தது. விக்ரம் லேண்டர் நிலவின் மேற்பரப்பில் சாய்ந்த நிலையில் விழுந்து ஒரு வாரக்காலம் முடிந்துள்ளது. இன்னும் இஸ்ரோவுக்கு எஞ்சியிருப்பது சில நாட்கள் தான். லேண்டர் மற்றும் மின்கலத்தின் ஆற்றலும் குறைந்து கொண்டே வருகிறது.

இந்நிலையில் லேண்டரின் தகவல் தொடர்பை மீண்டும் ஏற்படுத்த வாய்ப்புகள் மிகவும் குறைவாகவே உள்ளதாகக் கூறுகிறார் அறிவியலாளர் வெங்கடேஷ்.

விக்ரம் லேண்டர் நிலவில் விழுந்த பகுதியில் சூரியனின் ஒளிபடுவது 14 நாட்கள் தான் எனவும் இந்த 14 நாட்களுக்குள் மீண்டும் தகவல் தொடர்பை ஏற்படுத்துவது மிகவும் சவாலான ஒன்றாகும் எனவும் கூறுகிறார் சந்திரயான் 1 திட்டத்தின் இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை.

இருந்தாலும் இது வரை யாரும் ஆராயாத நிலவின் தென்பகுதியை விக்ரம் லேண்டர் அடைந்தது பெரும் வெற்றியாகவே பார்க்கப்படுகிறது.

Exit mobile version