நீட் தேர்வு வருவதற்கு முந்தைய காங்கிரஸ் அரசுதான் முக்கியக் காரணம் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் பேசிய அவர், நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற தமிழக அரசு முடிந்த அளவுக்கு அழுத்தம் கொடுத்து வருவதாக முதலமைச்சர் விளக்கம் அளித்தார்.
நீட் தேர்வு விலக்கு மசோதா நிறுத்தி வைக்கப்பட்டதற்கான காரணங்கள் இதுவரை தெரிவிக்கப்படவில்லை என்று சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் விளக்கம் அளித்துள்ளார். மசோதா நிறுத்தி வைத்ததற்கான காரணங்களை கேட்டு குடியரசுத் தலைவருக்கு கடிதம் எழுதியுள்ளதாகவும் அதற்கு பதில் கிடைக்கவில்லை என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
இடப்பற்றாக்குறை, மின் பளுவை குறைக்கும் வகையில், தமிழகம் முழுவதும் ஒற்றை கம்ப மின்மாற்றி நிறுவ நடவடிக்கை எடுக்கப்படும் என்று, மின்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில், உறுப்பினர் செம்மலை எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் இதனை கூறினார்.
தமிழகம் முழுதும் பழுதடைந்த குடிநீர் குழாய்களை மாற்ற சிறப்பு திட்டம் விரைவில் அறிக்கப்படும் என்று உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த அமைச்சர், 20 முதல் 30 ஆண்டுகள் பழமையான குடிநீர் குழாய்கள் மாற்றியமைக்க திட்டமிட்டுள்ளதாக கூறினார்.
சின்னாளப்பட்டியில் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, கசடு கழிவு மேலாண்மை திட்டத்தை செயல்படுத்த அரசு நடவடிக்கை எடுக்கும் என்று, உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறியுள்ளார். சட்டப்பேரவையில், ஆத்தூர் தொகுதி திமுக உறுப்பினர் ஐ.பெரியசாமி எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் இதனை தெரிவித்தார்.