தமிழக சட்டப்பேரவையில் உள்ளாட்சித் துறை மானியக் கோரிக்கைகள் மீது இன்று விவாதம் நடைபெறுகிறது.
இரண்டு நாட்கள் விடுமுறைக்கு பிறகு தமிழக சட்டப்பேரவை இன்று கூடுகிறது. ஏற்கனவே சட்டப்பேரவை ஜூலை 30 ஆம் தேதி வரை நடைபெறும் என்று சபாநாயகர் தலைமையிலான கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. இந்நிலையில் வேலூர் மக்களவைத் தேர்தல் தேதி வெளியானதைத் தொடர்ந்து சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் 20 ஆம் தேதியுடன் நிறைவடையும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி ஒவ்வொரு நாளும் 2 துறைகளின் மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது. இந்நிலையில் இன்று நடைபெறும் கூட்டத் தொடரில் நகராட்சி நிர்வாகம் , குடிநீர் வழங்கல் துறை ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறைகளின் மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெறுகிறது. உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி வேலுமணி எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கிறார்.