கேரளாவில் தேவசம்போர்டு அமைச்சராக ஒடுக்கப்பட்ட பிரிவைச்சேர்ந்த ஒருவரை நியமித்திருக்கிறது கேரளா அரசாங்கம்
கேரளாவில் இரண்டாவது முறையாக பினராயி விஜயன் தலைமையிலான இடதுசாரி அரசாங்கம் ஆட்சி அமைத்துள்ளது. இதற்கான பதவி ஏற்பு விழா நேற்று நடைபெற்றது. இதில் தேவசம்போர்டு அமைச்சராக தலித் ஒருவர் நியமிக்கப்பட்டிருப்பது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. புதிய வரலாறு படைக்கப்பட்டுள்ளது என்று பலரும் தங்கள் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். காரணம் தேவசம் போர்டு என்பது தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறையைப் போன்ற ஒரு துறை. அப்படியான ஒரு துறைக்கு தாழ்த்தப்பட்ட பிரிவைச்சேர்ந்த ஒருவரை அமைச்சராக நியமிப்பது என்பது கேரள வரலாற்றில் இதுவே முதன்முறை.
சிபிஎம்-ன் மத்திய குழு உறுப்பினரான ராதாகிருஷ்ணன் திரிச்சூர் மாவட்டத்தில் உள்ள செலக்கரா தொகுதியில் 40 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றியை பதிவு செய்தவர். கடந்த 2006ம் ஆண்டு கேரள சட்டசபையின் சபாநாயகராகவும் இருந்தார். அதுமட்டுமல்லாமல், ஈ.கே.நாராயணன் தலைமையிலான அரசாங்கத்தில் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சராகவும் பதவி வகித்தவர் ராதாகிருஷ்ணன்.
ராதாகிருஷ்ணனின் நியமனம் 2018 ஆம் ஆண்டில் மாநிலத்தை உலுக்கிய சபரிமலை கோயிலுக்கு பெண்கள் நுழைவது தொடர்பான சிக்கலான பிரச்சினையின் பின்னணியிலிருந்து அணுகப்படுகிறது.