எம்ஜிஆர் மாளிகை தாக்கப்பட்ட வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி 21 நாட்களாகியும், காவல்துறை நடவடிக்கை எடுக்காமல் என்ன செய்து கொண்டிருக்கிறது? என்று விடியா திமுக அரசிடம் அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் சி.வி.சண்முகம் கேள்வியெழுப்பியுள்ளார்.
இன்றைய தினம், உயர்நீதிமன்ற தீர்ப்பு குறித்து கழக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி அவர்களை சந்தித்து அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் சி.வி.சண்முகம் வாழ்த்து தெரிவித்தார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அவர், ”ஜூலை 11-ஆம் தேதி வானகரத்தில் அதிமுக பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது. அப்போது அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட பன்னீர் செல்வம் உள்ளிட்ட உறுப்பினர்கள் ரவுடிகளுடன் அதிமுக அலுவலகத்தில் நுழைந்து அலுவலகத்தை அடித்து உடைத்து சேதப்படுத்தினர். இச்சம்பவம் தொடர்பாக அன்றைய தினமே சென்னை மாவட்ட செயலாளரிடம் அதிமுக சார்பில் புகார் அளிக்கப்பட்டது.
ஆனால் புகார் தரப்பட்டவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல், தாக்கப்பட்ட அதிமுகவைச் சேர்ந்த 16 பேர் மீது காவல்துறை நடவடிக்கை எடுத்தது. மேலும் முதல்வர் ஸ்டாலினின் அறிவுறுத்தலின் பேரில் அதிமுக அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டது. பின்னர் அதுகுறித்து அதிமுக சார்பில் வழக்கு தொடரப்பட்டு அலுவலகம் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்படி கே.பழனிசாமி வசம் வந்தது.
அதன் பின்னர் அலுவலகத்திலிருந்த முக்கிய ஆவணங்கள் தாக்குதல் நடத்தப்பட்ட தினத்தில் திருடப்பட்டது குறித்தும் புகார் அளிக்கப்பட்டது. ஆனாலும் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. தமிழக காவல்துறை மீது எங்களுக்கு நம்பிக்கையில்லை. நடந்த அத்தனை சம்பவங்களுக்கும் காரணம் திமுகவும், காவல்துறையும்தான்.
பன்னீர்செல்வம் மீதும், தாக்குதலில் ஈடுபட்ட பிற குண்டர்கள் மீதும் புகார் தெரிவித்து பல நாட்களாகியும் காவல்துறையில் நடவடிக்கை எடுக்காமல் என்ன செய்கிறது? கோபாலபுரத்தில் அமர்ந்துகொண்டு மாவாட்டுகிறதா? பல ஆண்டுகளாக தமிழகத்தை ஆண்ட அதிமுகவிற்கே இந்த கதி என்றால், சாதாரண மக்களின் நிலை என்ன என்பதை அனைவரும் சிந்தித்துப் பார்க்கவேண்டும்
பன்னீர் செல்வம் சொந்த வீட்டில் திருடினாலும் திருட்டு திருட்டுதான்; இது அவரது அப்பா வீட்டு சொத்து அல்ல; இது அதிமுகவின் சொத்து” இவ்வாறு தெரிவித்தார்.