கிரெடிட் கார்டு மூலம் பெற்ற கடனை திருப்பி செலுத்துமாறு அனுப்பப்பட்ட நீதிமன்ற உத்தரவு கடிதத்தைக் கண்ட இளைஞர், மன உளைச்சல் காரணமாக தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது.
சென்னை, பொழிச்சலூர் பகுதியைச் சேர்ந்தவர் மகேஷ் குமார். இவர், ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள ஓர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். அவர், இரண்டு தனியார் வங்கிகளில் இருந்து கிரெடிட் கார்டை பயன்படுத்தி 5 லட்சம் ரூபாய் கடன் பெற்றதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், வங்கிகளில் இருந்து பெற்றக் கடனை திரும்ப செலுத்துமாறு மகேஷ் குமாருக்கு நீதிமன்ற உத்தரவுக் கடிதம் வந்தது.
உடனே பணத்தை வங்கிக்கு செலுத்த ஏற்பாடு செய்யுமாறு தனது தந்தையிடம் கூறியுள்ளார் மகேஷ்குமார். இருப்பினும், அதிர்ச்சியில் இருந்து மீளாத மகேஷ்குமார், மிகுந்த மன உளைச்சலில், தனது அறையில் தனிமையில் இருந்துள்ளார். வெகு நேரமாகியும் மகேஷ்குமாரின் அறைக்கதவு திறக்கப்படாததால், சந்தேகம் அடைந்த அவரது பெற்றோர், அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்துப் பார்த்த போது, மகேஷ் குமார் தூக்கில் உயிரிழந்த நிலையில் இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
இச்சம்பவம் குறித்து, தகவல் அறிந்து வந்த சங்கர் நகர் காவல்துறையினர் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.