பெற்ற கடனுக்கு வட்டி கட்ட முடியாததால், வங்கியை மாற்றுவதற்காக, தனியார் கடன் வழங்கும் வங்கியின் கிளியரன்ஸ் சான்றிதழை காண்பித்து, 35 லட்சம் ரூபாய் வரை பணம் பெற்று மோசடி செய்த தம்பதியை, போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையத்தைச் சேர்ந்தவர்கள், ஜெயப்பிரகாஷ், ஸ்ரீதேவி தம்பதி. இவர்கள் தொழிலை மேம்படுத்துவதற்காக, ஈரோடு ரெப்கோ வங்கியில் 60 லட்சம் ரூபாய் கடனைப் பெற்றனர். வட்டி அதிகமாக இருப்பதாகக் கூறி, கடனை ஈரோட்டிலிலுள்ள ஹெச்.டி.எப்.சி வங்கிக்கு மாற்றிக் கொண்டனர்.
அதற்கான சான்றாக, ரெப்கோ வங்கியிலிருந்து கடன் தொகைக்காக கிளியரன்ஸ் சான்றிதழ்களை ஜெயபிரகாஷ் தம்பதியிடம் கேட்டதுள்ளது. அதற்காக ரெப்கோ வங்கி, சான்றிதழ்களை ஹெச்.டி.எப்.சி வங்கியின் பெயரில் வழங்காமல், ஜெயப்பிரகாஷ், ஸ்ரீதேவி ஆகியோர் பெயரில் வழங்கியது. இந்த சான்றிதழ்களைப் பெற்ற இருவரும், ஹெச்.டி.எப்.சி வங்கிக்கு வழங்காமல், அதனை ஈரோட்டைச் சேர்ந்த அருணாசலம், சிதம்பரம், சுரேஷ் மற்றும் சித்ராதேவி ஆகியோரிடம் காண்பிக்க, அதை வைத்து 35 லட்சம் ரூபாய் வரை வெவ்வேறு இடங்களில் கடன் பெற்றுள்ளனர்.
இந்த முறைகேடு குறித்து, ஹெச்.டி.எப்.சி வங்கி அலுவலர்கள் மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினரிடம் புகார் தெரிவித்தனர். அதன் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், விசாரணையை தொடங்கினர். முதற்கட்டமாக நூதனமான முறையில் ஜெயப்பிரகாஷ், ஸ்ரீதேவி தம்பதி முறைகேட்டில் ஈடுப்பட்டது தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து, முறைகேட்டில் ஈடுபட்ட 7 பேர் மீதும் 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தது. இதனைத் தொடர்ந்து ஜெயப்பிரகாஷ், ஸ்ரீதேவி, அருணாசலம் ஆகியோரை கைது செய்த காவல்துறையினர், தலைமறைவாக உள்ள 4 பேரை தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
Discussion about this post