ஒடிசாவில் மூன்று ரயில்கள் மோதிக்கொண்ட கோர விபத்துக்கு தவறான சிக்னல் அளிக்கப்பட்டதே காரணம் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த விபத்தில் 275 பேர் இறந்துள்ளனர் என்கிற அதிகாரப் பூர்வத் தகவலை ஒடிஷா மாநில அரசே வழங்கியுள்ளது. மேலும் ஆயிரக்கணக்கானோர் இன்னும் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். தற்போது வரை மறுசீரமைப்பு பணியானது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கிட்டத்தட்ட முக்கால்வாசி பணி நிறைவடைந்துவிட்டது என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், மின்னணு இண்டர்லாக்கிங்கில் ஏற்பட்ட மாற்றத்தால் இந்த விபத்து நடந்த்திருக்கிறது என்றும் தண்டவாளத்தை சீரமைக்க முயன்று கொண்டிருக்கிறோம் என்றும் செய்தியாளர்களிடம் தெரிவித்திருந்தார். மேலும் மூன்று மாதங்களுக்கு முன்பே இந்த தண்டவாளப் பகுதியில் குறைபாடுகள் இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. கடந்த பிப்ரவரி 8-ம் தேதி பெங்களூர்-டெல்லி சம்பர்க் கிராந்தி விரைவு இரயில், மைசூரில் உள்ள ஹோசதுர்கா சாலை ரயில் நிலையத்தில், சிக்னல் கோளாறு காரணமாக சரக்கு ரயிலுடன் மோதி விபத்தில் சிக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து இந்த சிக்னல் குறைபாட்டினை குறித்து எச்சரித்து இந்திய ரயில்வே தலைமையகத்துக்கு, தென்மேற்கு ரயில்வேயின் தலைமைச் செயல் மேலாளர் கடிதம் எழுதியிருப்பது தெரியவருகிறது.
அவரது கடிதத்தில், ஹோசதுர்கா ரயில் நிலையத்தில் ஏற்படவிருந்த விபத்து சம்பவம் சிக்னல் அமைப்பில் கடுமையான குறைபாடுகள் இருப்பதை குறிக்கிறது. எனவே எலக்ட்ரானிக் சிக்னல் பராமரிப்பாளர், எலெக்ட்ரானிக் இண்டர்லாக் முறையைத் தவிர்த்துவிட்டிருக்கிறார். ஆகவே, பராமரிப்பு வேலையை முடுக்கிவிடுமால் விட்டால் பெரும் விபத்துக்கு வழிவகுக்கும் என்று குறிப்பிட்டிருக்கிறார். இந்தக் கடிதத்தினை இரயில்வேத் துறை முறையாக படித்திருந்தால், இந்தக் குறைபாடினை கலைந்திருக்கலாம். மேலும் இவ்வளவு பெரிய கோரவிபத்தினை தடுத்து இருந்திருக்க முடியும்.
Discussion about this post