ஒடிசா மாநிலத்தில் நடைபெற்ற ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு, அதிமுக பொதுச்செயலாளரும் தமிழக எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ட்விட்டரில் அவர் வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில், ஒடிசாவின் பாலசோர் மாவட்டம் அருகே சென்னை கோரமண்டல் எக்ஸ்பிரஸ், ஹவுரா ரெயில் மற்றும் சரக்கு ரயில் ஆகிய 3 ரயில்கள், ஒன்றின் மீது ஒன்று மோதி விபத்திற்குள்ளான விபத்தில், 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர் என்ற செய்தி கேட்டு மிகுந்த மனவேதனை அடைந்தேன் என தெரிவித்துள்ளார். குறிப்பாக தமிழ்நாட்டை சேர்ந்த பயணிகள் அதிகம் பாதிக்கப்பட்டிருக்கின்றனர் என்பதை அறிந்து சொல்லொன்னா துயருற்றேன் என தெரிவித்துள்ளார். மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதுடன், விபத்தில் காயமுற்று சிகிச்சை பெற்று வருவோர் விரைவில் பூரண நலம் பெற்று வீடு திரும்ப அனைத்து முன்னெடுப்பையும், தமிழக அரசு துரிதமாக எடுக்க வலியுறுத்துவதாக குறிப்பிட்டுள்ளார். மேலும் தமிழக பயணிகளின் உறவினர்கள் தொடர்பு கொள்ள, தனி அவசர தொடர்புக்கான அனைத்து வசதிகளையும் ஏற்படுத்த வேண்டும் எனவும், இந்த கோர ரயில் விபத்தில் இறந்த தமிழக பயணிகளுக்கு உரிய நிவாரணத் தொகையும், காயமடைந்தோருக்கு நிதி உதவியும் உடனடியாக வழங்க வேண்டும் எனவும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.
Discussion about this post