காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது ராஜினாமாவை அறிவித்திருக்கும் நிலையில், அக்கட்சியின் காரிய கமிட்டி கூட்டம் நாளை கூடுகிறது.
நடந்து முடிந்த 17-வது மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி படுதோல்வி அடைந்தது. காங்கிரஸ் கட்சி வெறும் 52 இடங்களில் மட்டுமே வெற்றிபெற்று தொடர்ந்து 2-வது முறையாக அதிகாரப்பூர்வ எதிர்க்கட்சி என்னும் அந்தஸ்தை இழந்திருக்கிறது.
இதனிடையே உத்தரப் பிரதேசம் மாநிலம் அமேதி தொகுதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தோல்வி அடைந்தது அக்கட்சியின் தொண்டர்களிடையே பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து தோல்விக்கு பொறுப்பேற்று காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து தாம் விலகுவதாக ராகுல் காந்தி அறிவித்தார்.
இந்தநிலையில், காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டிக் கூட்டம் நாளை காலை 11 மணிக்கு டெல்லியில் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் ராகுல் காந்தி உள்ளிட்டோரின் ராஜினாமா குறித்து முக்கிய முடிவு எடுக்கப்படும் என தெரிகிறது.