ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டதை கண்டித்து சென்னையில் நடைபெற்ற போராட்டத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் யாரும் பங்கேற்காததும், தொண்டர்கள் சொற்ப அளவிலேயே பங்கேற்றதும் ப.சிதம்பரம் தனிமைப்படுத்தப்பட்டுள்ளாரா? என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.
நேற்று இரவு சிபிஐ அதிகாரிகள் முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தை அவரது இல்லத்தில் கைது செய்தனர். இந்த கைது நடவடிக்கையை கண்டித்து சென்னையில், அண்ணா சாலை, சத்தியமூர்த்தி பவன் மற்றும் அடையார் உள்ளிட்ட பகுதிகளில் சொற்ப அளவிலான காங்கிரஸ் தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். குறிப்பாக போராட்டத்தில் பங்கேற்ற தொண்டர்களை விட போலீசார் மற்றும் பத்திரிக்கையாளர்கள் அதிக அளவில் இருந்ததால், இது வெற்றுப் போராட்டமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஆனால் இந்த போராட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ். அழகிரி மற்றும் முன்னாள் தலைவர்களான ஈ.வி.கே.ஸ் இளங்கோவன், திருநாவுக்கரசு, தங்கபாலு, சுதர்சன நாச்சியப்பன் உள்ளிட்டோர் பங்கேற்கவில்லை.
இதே போல், முன்னணி தலைவர்களான, விஜயதரணி, ஜே.எம். ஆருண், தமிழ்நாடு காங்கிரஸ் சட்டமன்ற கட்சி தலைவர் கே. ஆர்.ராமசாமி, பிரின்ஸ் உள்ளிட்ட சட்டமன்ற உறுப்பினர்களும் பங்கேற்காதது சிதம்பரத்தை காங்கிரஸ் கைகழுவுகிறதா? என்ற சந்தேகத்தை உறுதிப்படுத்தும் விதமாக உள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். மேலும், சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்டதை எதிர்த்து திமுக நடத்தும் போராட்டத்தில் பங்கேற்கப் போவதாக அறிவித்த ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம், தந்தையின் கைது நடவடிக்கையை கண்டித்து நடைபெறும் போராட்டத்தில் பங்கேற்காததும் குறிப்பிடத்தக்கது.