மக்களவை தேர்தலில் போட்டியிட உள்ள சோனியா காந்தி, ராகுல்காந்தி உள்ளிட்ட 15 பேர்கள் கொண்ட முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை டெல்லியில் காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது.
மக்களவை தேர்தல் இன்னும் சில வாரங்களில் நடைபெறவுள்ளது. இதற்கான அறிவிப்பை தலைமை தேர்தல் ஆணையம் இன்னும் சில தினங்களில் அறிவிக்க உள்ளதாக கூறப்பட்டுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்படவில்லை என்றபோதிலும், தேசிய மற்றும் மாநில கட்சிகள் அதற்கான பணிகளில் முழுமூச்சில் ஈடுபட்டுள்ளன.
தேர்தல் தேதியே அறிவிக்கப்படாத நிலையில், காங்கிரஸ் கட்சி நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் 15 பேர் கொண்ட முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதன்படி, உத்தரபிரதேச மாநிலத்தில் 11 பேரும் குஜராத் மாநிலத்தில் 4 பேரும் போட்டியிட உள்ளனர்.
காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, உத்தரபிரதேசத்தின் அமேதி தொகுதியிலும் முன்னாள் தலைவர் சோனியாகாந்தி ரேபரேலியிலும் மீண்டும் போட்டியிட உள்ளதாக காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.
மக்களவை தேர்தலையொட்டி, பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் முழுமூச்சில் கூட்டணி பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு அதை அறிவித்து வருகின்றன. இந்நிலையில், காங்கிரஸ் கட்சி தனது முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.