அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்தாத பிரியங்கா காந்தியின் வரவு

தேர்தல் முடிவுகளையே தலைகீழ் மாற்றி விடுவார் என்ற நம்பிக்கையுடன் காங்கிரசால் களத்தில் இறக்கப்பட்ட பிரியங்கா காந்தியின் வரவு தேர்தலில் எவ்வித தாக்கத்தை ஏற்படுத்தியது என்பதை பற்றி விளக்குகிறது இந்த செய்தி தொகுப்பு…

இந்திய அரசியலின் தலையெழுத்தை நிர்ணயிக்கும் மாநிலமாகக் கருதப்படும் உத்தரப்பிரதேசத்தில் பாஜகவை தோற்கடிக்க வேண்டும் என்பதற்காக பகுஜன் சமாஜ், சமாஜ்வாதி கட்சி, காங்கிரஸ் ஆகிய கட்சிகள் கூட்டணி அமைக்க முயன்றன. ஆனால் காங்கிரஸ் கட்சிக்கு 2 தொகுதிகள் மட்டுமே ஒதுக்கப்படும் என்று பகுஜன் சமாஜூம் சமாஜ்வாதி கட்சியும் பிடிவாதமாக இருந்தன. இது தங்களை அவமானப்படுத்தும் செயல் என்று எண்ணிய காங்கிரஸ், மக்களவை தேர்தலில் தனித்து போட்டியிடுவதாக அறிவித்தது.

முந்தைய தேர்தல்களில் தனித்து போட்டியிட்டு பெற்ற தோல்விகள் அந்தக் கட்சிக்கு அச்சத்தை ஏற்படுத்தியது. இதுபோன்ற இக்கட்டான சூழலில் தான் பிரியங்கா காந்தி களமிறக்கப்பட்டார். இந்திரா காந்தியைப் போன்ற வசீகரம், தொண்டர்களுடன் எளிதாகப் பழகும் தன்மை உள்ளிட்ட காரணங்களால் பிரியங்காவால் மிகப்பெரிய மாற்றம் வருமென்று காங்கிரஸ் நம்பியது.

ராகுல் காந்தி போட்டியிட்ட அமேதி தொகுதியிலும், தான் பொறுப்பேற்ற கிழக்கு உத்தரப் பிரதேசத்தில் இருந்த தொகுதிகளிலும் பிரியங்கா தீவிர பிரசாரம் மேற்கொண்டார். ஆனால் அவரது பிரசாரத்தால் ராகுல் காந்தி கூட அமேதியில் வெற்றி பெற முடியவில்லை.

உத்தரப்பிரதேசத்தில் பாஜக 62 தொகுதிகளை கைப்பற்றியது. 8 தொகுதிகளில் மெகா கூட்டணியின் தோல்விக்கு காங்கிரஸ் காரணமா இருந்தது. மாயாவதி, அகிலேஷ் யாதவுடன் காங்கிரஸ் கூட்டணி வைத்திருந்தாலும் பெரிய அளவில் மாற்றங்கள் ஏற்பட்டிருக்காது என்பதையே தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன.

இந்த தேர்தலில் காங்கிரஸ் பெற்ற வாக்கு சதவீதத்தை பார்க்கும் போது, பிரியங்கா காந்தியின் வரவு எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை என்பது உறுதியாகியுள்ளது. அது மட்டுமின்றி காங்கிரசின் செல்வாக்கை மீட்பதற்கு சரியான தலைமை இல்லை என்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

Exit mobile version