காங்கிரஸ் – திமுக கூட்டணி பொருந்தாத கூட்டணி என்று விமர்சித்துள்ள அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, அக்கட்சிகளின் கீழ்மட்ட தொண்டர்களே இக்கூட்டணியை ஏற்றுக்கொள்ளவில்லை என்றும் கூறியுள்ளார்.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே சத்திரபட்டி பகுதியில் மகளிர் சுகாதார வளாக கட்டிடத்திற்கான பூமி பூஜை நடைபெற்றது. பால்வளத் துறை அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி மற்றும் சட்டமன்ற உறுப்பினர் சந்திர பிரபா முத்தையா ஆகியோர் அடிக்கல் நாட்டினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, திமுக காங்கிரஸ் கூட்டணி ஒவ்வாத கூட்டணி என்றும் கூடா நட்பு கேடாய் முடியும் என கருணாநிதியே கூறியுள்ளதாகவும் தெரிவித்தார். முள்ளிவாய்க்கால் படுகொலைக்கு காரணமான காங்கிரஸ் கட்சியை கடுமையாக விமர்சனம் செய்தவர் வைகோ என்றும் தற்போது கூட்டணியில் உள்ளதால் காங்கிரஸ் கட்சிக்காக மக்களிடம் சென்று எப்படி வாக்குக் கேட்பார் என்று அவர் கேள்வி எழுப்பினார்.