புத்தகத்தை நீங்கள் மேலிருந்து கீழ்படித்தால், கீழே இருக்கும் உங்களை அது மேலே உயர்த்தும்.அணுகுண்டு ஒருமுறைதான் வெடிக்கும்.ஆனால் புத்தகமோ திறக்கும்போதெல்லாம் வெடிக்கும். இவையெல்லாம் புத்தகம் குறித்தும், அதன் வாசிப்பு குறித்தும் உலாவரும் அனுபவ மொழிகள். அதே போல் ஒரு நூலகம் திறக்கப்படும் போது 10 சிறைச்சாலைகள் மூடப்படுகிறது என்பது காந்தியின் பொன்மொழி.
இப்படி புத்தக வாசிப்பும், நூலகத்தின் தேவையும் பலராலும் வலியுறுத்தப்படும் நிலையில் மாணவர்களையும் புத்தகவாசிப்பில் ஈடுபடுத்தும் வகையில் பள்ளிகளில் நூலகங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
தமிழகம் முழுவதும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் என 6ஆயிரத்து 173 பள்ளிகள் இயங்கி வருகிறது. இவற்றில் 360 பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாகவும், 3ஆயிரத்து 313 பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாகவும் இருந்து வருகிறது. இந்தப் பள்ளிகளில் உள்ள நூலங்களில், மாணவர்கள் தங்கள் படிப்பாற்றலை மேம்படுத்தும் வகையில் பல்வேறு தலைப்புகளில், பல்வேறு துறைசார்ந்த நூல்கள் வாங்கப்பட்டு வந்தன.
அதிமுக ஆட்சியில் 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை பதிப்பாளர்களிடம் இருந்து முறையாக நூல்கள் ஆய்வு செய்யப்பட்டு வாங்கப்பட்டு வந்த நிலையில் திமுக ஆட்சியில் கடந்த 21 மாதமாக நூலகத்துறை சரியாக செயல்படாததால் நூல்கள் வாங்கப்படவில்லை என்றும் நூல்கள் வாங்குவதை திமுக அரசு கிடப்பில் போட்டுவிட்டதாகவும் குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது. அதே நேரத்தில், புத்தகங்கள் கொள்முதல் தொடர்பாக குழு அமைத்து பரிசீலிக்காமல், திமுக ஆதரவு பதிப்பகங்களிடம் இருந்து மட்டுமே புத்தகங்கள் வாங்கப்படுவதாகவும் புகார் கூறப்படுகிறது.
அறிவார்ந்த மாணவ சமூகத்தை உருவாக்க தனிநபர்கள், பதிப்பாளர்கள் என அனைத்து தரப்பினரிடம் இருந்தும் தரமான புத்தகங்களை பெற்று நூலகங்களுக்கு வழங்க வேண்டும் என்றும் குரல்கள் எழுந்துள்ளன.
நூலகங்களுக்கு புத்தகங்கள் கொள்முதல் செய்து புத்தகவாசிப்பை மாணவர்களிடம் மேம்படுத்துவதில் அக்கறை செலுத்தாமல் எழுதாத பேனாவுக்கு கடலில் சிலைவைக்க விடியா அரசு ஆர்வம் செலுத்துவது ஏன் என்றும் பதிப்பாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். எழுதாத பேனாவுக்கு செலவிடப்படும் 80 கோடியில் எத்தனையோ படைப்பாளிகளின் நூல்களை வாங்கி அவர்களை இன்னும் அதிகமாக எழுதச் செய்வதன் மூலம் அறிவுசார்ந்த சமுதாயத்தை உருவாக்க முடியும். ஆனால் அதற்கு எவ்வித முன்னெடுப்பும் இல்லாமல் படைப்பாளிகளின் கரங்களை ஒடுக்கிவிட்டு பேனா சிலைக்கு ஆர்வம் காட்டுவது தான் தமிழை விற்று பிழைப்பு நடத்தும் விடியா அரசின் திராவிடமாடல் ஆட்சியா என்று தமிழ் ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகிறார்கள்.