கொரோனா நோய் பரவல் காரணமாக கடந்த நான்கரை மாதங்களாக மூடப்பட்டு இருந்த கோயம்பேடு உணவு தானிய சந்தை இன்று திறக்கப்பட்டது.
கொரோனாத் தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக, கடந்த மே மாதத்தில் கோயம்பேடு சந்தை தற்காலிகமாக மூடப்பட்டது. கோயம்பேடு சந்தையில் இயங்கி வந்த மொத்த காய்கறி அங்காடி தற்காலிகமாக திருமழிசையிலும், கனி அங்காடி மாதவரம் புறநகர் பேருந்து நிலையத்திலும், மலர் அங்காடி வானகரத்திற்கும் தற்காலிமாக மாற்றப்பட்டது.
இதற்கிடையே, சென்னையில் கொரோனா தொற்று கட்டுக்குள் வந்துள்ள நிலையில், கோயம்பேடு சந்தையை மீண்டும் திறக்க வணிகர்கள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து, கோயம்பேடு உணவு தானிய வணிக வளாகம் 18-ஆம் தேதி திறக்கப்படும் என்றும், காய்கறி சந்தை 28-ம் தேதி திறக்கப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்திருந்தது.
கடந்த ஓரிரு நாட்களுக்கு முன்பு கடைகள் சீரமைப்பு பணி நடைபெற்று முடிந்தது. அரசின் அறிவிப்பைத் தொடர்ந்து, உணவு தானிய வணிக வளாகம் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழும அதிகாரிகளால் திறந்து வைக்கப்பட்டது.
இதனால் மொத்த மற்றும் சில்லறை வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பின் தலைவர் விக்கிரம ராஜா உள்பட பல வணிகர் அமைப்புத்தலைவர்கள் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துக்கொண்டனர்.