முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு கெளரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது

டாக்டர் எம்.ஜி.ஆர். கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் சார்பில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு கெளரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது.

டாக்டர் எம்.ஜி.ஆர். கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் 28ஆவது பட்டமளிப்பு விழா, சென்னை வேலப்பன்சாவடியில் உள்ள ஏசிஎஸ் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது. விழாவில் சிறப்பு விருந்தினராக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார். நிகழ்ச்சிக்கு வருகை தந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு கல்லூரி சார்பில் செண்டை மேளங்கள், நாதஸ்வரம் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. டாக்டர் எம்.ஜி.ஆர். கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் வேந்தர் ஏ.சி.சண்முகம் முதலமைச்சருக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.

பின்பு, இந்தியாவின் சிறந்த தொழில்துறை மாநிலமாகத் தமிழ்நாட்டை முன்னேற்றியதற்கும், இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, முதலீடுகளை ஈர்த்ததற்காகவும், தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கைச் சிறப்பாகப் பராமரித்ததற்காகவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு கெளரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது. விழாவில் பேசிய முதலமைச்சர் டாக்டர் எடப்பாடி பழனிசாமி, கெளரவ டாக்டர் பட்டம் பெற்றதன் மூலம் தனது பொறுப்புகள் மேலும் அதிகரித்துள்ளதாகக் கூறினார். கல்வி வளர்ச்சிக்காகத் தமிழக அரசு மேற்கொண்டுள்ள திட்டங்களைப் பட்டியலிட்ட முதலமைச்சர், மாணவர்கள் ஏட்டுக் கல்வியுடன், வாழ்க்கைக் கல்வியையும் கற்க வேண்டும் என்றார். 6 மாவட்டங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்க மத்திய அரசை வலியுறுத்தி வருவதாக முதலமைச்சர் டாக்டர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

Exit mobile version