அதிமுகவின் 47வது ஆண்டு விழாவையொட்டி, முதலமைச்சர் பழனிசாமி விழுப்புரத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசியதாவது,
சாதாரண தொண்டனாக இருந்த நான் இந்த நிலைக்கு வந்திருக்கிறேன் என்றால் அதிமுக வில் உள்ள ஜனநாயகமே அதற்கு காரணம். வேறு எந்த கட்சியிலும் இந்த நிலை இல்லை.
அது தேசிய கட்சியாக இருந்தாலும் சரி. மாநில கட்சியாக இருந்தாலும் சரி. திமுகவில் தலைவராக கருணாநிதி இருந்தார். இப்போது ஸ்டாலின் இருக்கிறார். புதிதாக உதயநிதி வந்து புகுந்துள்ளார். ஆனால் அதிமுகவில் அண்ணா இருந்தபோது, எப்படி சாதாரண தொண்டர்கள் உயர்ந்த பதவிக்கு வந்தனரோ அதை, எம்.ஜிஆரும், ஜெயலலிதாவும் பின்பற்றினர்.
ஜெயலலிதா உயிருடன் இருந்தபோதே ஓபிஎஸ் முதலமைச்சரானார். இது திமுகவில் முடியுமா? கருணாநிதி உயிருடன் இருந்தவரை ஸ்டாலினை தலைவராக்கவில்லை. உங்க அப்பாவே உங்களை தலைவராக்கவில்லை. மக்கள் எப்படி உங்களை ஏற்றுக்கொள்வார்கள்?
ஸ்டாலின் தலைவர் பதவிக்கு சரியானவர் அல்ல என்பதால் தான் ஸ்டாலினை கருணாநிதி தலைவராக்கவில்லை. அம்மா மறைந்ததால் இந்த ஆட்சியை கலைத்து விடலாம் என திமுக கணக்கு போட்டனர். அது நிறைவேறவில்லை.
கட்சியை உடைக்க திட்டம் போட்டனர் அதுவும் நிறைவேறவில்லை. தற்போது 3வதாக ஒரு திட்டம் தீட்டியுள்ளனர். அதாவது நம் மீது புகார் செய்தால், மக்களுக்கு தவறான எண்ணம் ஏற்படும் என்பதுதான் அது.
இந்த ஆயுதத்தை கையில் எடுத்துள்ளனர். இதுவும் நிறைவேறாது. தோல்வியில் தான் முடியும். இந்த ஆட்சி ஒரு வருடம் 8 மாதத்தை கடந்து விட்டது.
இதற்கு காரணம் தொண்டர்கள். நிர்வாகிகள். எனவே கட்சியையும் உடைக்க முடியாது. ஆட்சியையும் கவிழ்க்க முடியாது. அதிமுக தொண்டர்கள் நிர்வாகிகள் தங்கள் ரத்தத்தை வியர்வையாக சிந்தி, ஆட்சியை காப்பாற்றி வருகின்றனர்.” இவ்வாறு முதலமைச்சர் பேசினார்.