கால்நடைகளுக்கான அவசர ஊர்தி சேவைத் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதல்வர்

கால்நடைகளுக்கான நடமாடும் அவசர மருத்துவ ஊர்திகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடக்கி வைத்தார்.

கால்நடைப் பராமரிப்புத்துறை சார்பில் ஏற்கெனவே நாமக்கல், மதுரை மாவட்டங்களில் நடமாடும் அவசர மருத்துவ ஊர்தி சோதனை முறையில் செயல்படுத்தப்பட்டது. இந்நிலையில் மருத்துவமனைகள் இல்லாத ஊர்ப்புறங்களுக்கும் சென்று கால்நடைகளுக்குச் சிகிச்சை அளிப்பதற்கு வசதியாகத் தமிழக அரசின் கால்நடைப் பராமரிப்புத் துறை சார்பில் 2 கோடியே 40 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் குளிர்சாதன வசதி கொண்ட 22 நவீன அவசர மருத்துவ ஊர்திகள் வாங்கப்பட்டுள்ளன.

இவற்றில் கால்நடை மருத்துவர் ஒருவரும், உதவியாளர் ஓட்டுநர் ஆகியோரும் இருப்பர். 1962 என்கிற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டால் இந்த ஊர்தி கால்நடைகள் உள்ள பகுதிக்கே வந்துவிடும். இந்த ஊர்திகளின் உள்ளேயே கால்நடைகளுக்கு அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளும் அளவுக்கு வசதி செய்யப்பட்டுள்ளன.  இந்த ஊர்திகள் சென்னை மாதவரத்தில் உள்ள தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் உள்ள கட்டுப்பாட்டு மையத்துடன் இணைந்து செயல்படும்.

சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கால்நடைகளுக்கான நடமாடும் அவசர மருத்துவ ஊர்திகளைத் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் ஜெயக்குமார், உடுமலை ராதாகிருஷ்ணன், ராஜேந்திர பாலாஜி ஆகியோரும் கலந்துகொண்டனர்.

Exit mobile version