சென்னை தலைமைச் செயலகத்தில், முதலமைச்சர் தலைமையில் நடைபெற்ற முதலீட்டு வழிகாட்டுதல் மற்றும் ஒற்றைச்சாளர அனுமதிக்கான முதல் கூட்டத்தில், 21 தொழில் திட்டங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது, 8 ஆயிரத்து 835 கோடி ரூபாய் அளவில் முதலீடுகளை ஈர்க்க புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டன. இந்த முதலீடுகளை உறுதி செய்யும் வகையில், முதலீடுகளுக்கான வசதிகளை மேம்படுத்துதல், அனுமதி வழங்குதலை துரிதப்படுத்த முதலமைச்சர் தலைமையில் உயர் நிலை அதிகாரக்குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவின் முதல் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. இதில், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, எம்.சி.சம்பத், கருப்பணன், ஆர்.பி.உதயகுமார், பென்ஜமின் மற்றும் அரசு உயரதிகாரிகளும் பங்கேற்றனர். இக்கூட்டத்தில், பல்வேறு நிலைகளில் இருந்த 21 தொழில் திட்டங்கள் குறித்து விவாதித்து அனுமதி வழங்கப்பட்டது. இதன் மூலம் 8 ஆயிரத்து 120 கோடி அளவிற்கு தொழில் முதலீடுகள் முழுமையாக செயல்பாட்டிற்கு வர உள்ளன. இந்த தொழில் திட்டங்கள் மூலம் சுமார் 16 ஆயிரம் பேருக்கு விரைவில் வேலை வாய்ப்பு கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை, காஞ்சிபுரம், விழுப்புரம், கோவை, சேலம் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் இந்த தொழில் திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன.