கொரோனாவை கட்டுப்படுத்திய சீனா: சாத்தியமானது எப்படி?

உலகை உலுக்கிவரும் கொரோனா வைரஸ் சீனாவில் இருந்துதான் முதன்முறையாக பரவிய நிலையில், அந்நாட்டில் சமீப நாட்களில் நிலைமை பெரிதும் மாறி வருகின்றது. கடந்த சில நாட்களாக சீனாவில் புதிய நோயாளிகளின் எண்ணிக்கை இரட்டை இலக்கத்தையே எட்டவில்லை. இதன் காரணம் சீனா மேற்கொண்ட கடுமையான நடவடிக்கைகள்தான். சீனாவின் இந்த நடவடிக்கைகள் ‘சமூக அணு ஆயுதம்’ என்று வர்ணிக்கப்படுகின்றன.

சீனாவின் வுகானில் 2019 ஆம் ஆண்டு டிசம்பர் 8 ஆம் தேதி கொரோனா வைரஸ் தொற்று முதன்முதலாகக் கண்டறியப்பட்டபோது, அதன் அபாயம் சீன அரசுக்குத் தெரியவில்லை. இந்த வைரஸ் குறித்துப் பேசியவர்களை ‘வதந்தி பரப்பியவர்கள்’ என்று அழைத்த சீன அரசு அவர்களை சிறையில் அடைத்தது.

ஜனவரி 14 ஆம் தேதி கொரோனா அதிக வேகத்தில் பரவத் தொடங்கிய போதுதான் அதன் அபாயம் சீன அரசுக்கு புரிந்தது. உடனே கொரோனா வைரஸ் பரவத் தொடங்கிய வுகான் பகுதியையும், ஹூபே மாகாணத்தையும் சீன அரசு மூடி சீல் வைத்தது. அங்குள்ள மக்கள் வெளியேறவும், பிறர் உள்ளே வரவும் தடை விதிக்கப்பட்டது.

ஆனால் அதற்குள்ளாகவே கொரோனா வைரஸ் சீனாவின் பிற மாகாணங்களுக்கும் பரவியதால், சீனாவின் அனைத்து மாகாணங்களும் அடுத்தடுத்து சீல் வைக்கப்பட்டன. இப்படியாக, கடந்த ஜனவரி 23ஆம் தேதி முதல், 93 கோடி மக்களை சீன அரசு அவர்கள் வாழும் பகுதிகளிலேயே முடக்கியது.

இதன் பின்னர் சீனாவில் மக்கள் தங்கள் உடல் வெப்பநிலையை பதிவு செய்ய வேண்டியது கட்டாயமாக்கப்பட்டது. அத்தோடு ஒவ்வொரு நபரின் பயண விவரங்களும் அவர்களது வீடுகள் மற்றும் அலுவலகங்களில் வைத்து பதிவு செய்யப்பட்டன. இதனால் கொரோனா வைரஸ் யார் யார் மூலம், எந்தெந்த இடங்களில் பரவியது? என்பது வரைபடங்கள் மூலம் கண்டுபிடிக்கப்பட்டன.

பின்னர் பொதுமக்கள் சாலைகளுக்கு வருவதைத் தடுக்க, பள்ளிகள் மூடப்பட்டு ஆன்லைனில் வகுப்புகள் நடத்தப்பட்டன. ஒரு வீட்டுக்கு ஒருவர் மட்டுமே வெளியில் சென்றுவர முடியும் என்று புதிய விதி அமல்படுத்தப்பட்டது.

மக்கள் வீடுகளை விட்டு வெளியேற இயலாத நிலையில் அவர்களுக்கான உணவு, கார் ஓட்டுநர்கள் மூலம் வீடுகளுக்கே கொண்டுவந்து தரப்பட்டன. மருத்துவமனைகளில் உள்ளவர்களுக்கான மருந்துகளும் மருத்துவமனைகளுக்கே கொண்டுவந்து தரப்பட்டன. கொரோனா தாக்கி சிகிச்சையில் உள்ளவர்களின் குழந்தைகளை பாதுகாக்கும் பொறுப்பை சீன அரசே எடுத்துக் கொண்டது.

பொது நிகழ்ச்சிகள், கூட்டங்கள், திருமண விழாக்கள் ரத்து செய்யப்பட்டன. ஹோட்டல்களில் கூட மக்கள் தடுப்புகள் மூலம் பிரிக்கப்பட்டனர். இதனால் கொரோனா பரவாமல் பார்த்துக் கொள்ளப்பட்டது. இன்னொரு பக்கம் சீனா அரசு ஏற்கனவே வைத்திருந்த முகக் கண்காணிப்பு சாதனங்களும் கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டன. மனிதர்களின் கண்கள் மற்றும் நெற்றியை வைத்து அவர்களது அடையாளத்தைக் கண்டுபிடிக்கு இந்தத் தொழில்நுட்பத்தைக் கொண்டு, யாரெல்லாம் உடல்நலம் இல்லாமல் இருக்கிறார்கள்? யாரெல்லாம் பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றவில்லை? – என்று சீன அரசு கண்காணித்தது. கைபேசிகளைக் கொண்டும் மக்களின் நடமாட்டங்கள் கண்காணிக்கப்பட்டன.

அரசின் பாதுகாப்பு விதிமுறைகளை மீறுவோருக்கு 3 ஆண்டுகள் முதல் 7 ஆண்டுகள் வரையில் சிறை தண்டனை விதிக்கப்படும் – என்று சீன அரசு புதிய சட்டம் ஒன்றை இயற்றியது. கொரோனா பாதிக்கப்பட்ட மக்கள் குறித்த புதிய தகவல்கள் உதவி எண்கள் மூலமும் சமூக வலைத்தளங்கள் மூலமும் திரட்டப்பட்டன. புதிய தகவல்களை அளிப்பவர்களுக்கு சன்மானங்களும் அளிக்கப்பட்டன.

கொரோனா வைரஸ் பரிசோதனைக்கான கட்டணத்தையும். பாதிக்கப்பட்டவர்கள் எந்த நாட்டவராக இருந்தாலும் அவரது சிகிச்சைக்கான கட்டணத்தையும் சீன அரசே ஏற்றுக் கொண்டது.

இதுபோன்ற அதிரடி நடவடிக்கைகளால் மட்டுமே சீனாவில் கொரோனாவின் வேகத்தைப் பெருமளவுக்குக் கட்டுப்படுத்த முடிந்தது. சீன அரசின் இந்த நடவடிக்கைகளில் பல மனித உரிமை மீறல்களாகவும் இருந்தன என்ற புகார் உள்ளபோதும், கொரோனாவைக் கட்டுப்படுத்துவதில் சீனா அடைந்தது குறிப்பிடத்தக்க வெற்றி என்பதை யாரும் மறுக்க முடியாது.

சீனாவுக்கு வெளியே, குறிப்பாக மனித உரிமைகளையும் தனி மனித சுதந்திரத்தையும் பெரிதும் மதிக்கும் ஐரோப்பிய நாடுகளில் கொரோனா வைரஸ்சைக் கட்டுப்படுத்த அரசுகள் மிகவும் திணறுகின்றன. இது கொரோனாவின் வேகம் அதிகரிக்க முக்கியக் காரணமாக உள்ளது. இதனால்தான் கொரோனா வைரஸ் அங்கெல்லாம் 9 முதல் 18 மடங்கு வரை அதிக வேகத்தில் பரவுகின்றது. ஆனால் மக்கள் முழுவதும் ஒத்துழைக்க முன்வரும் போது அங்கும் கூட கொரோனாவின் வேகம் கட்டுப்படுத்தப்பட வாய்ப்புகள் உருவாகும்.

சீனாவின் அருகே உள்ள மற்றொரு சர்வாதிகார நாடான வடகொரியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் எப்படி உள்ளது? – என்பது குறித்த தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை. சீனா சென்று வந்த 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களை வடகொரிய அரசு தனிமைப்படுத்தியதாகவும், மீறி பொது இடத்துக்கு சென்ற ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும் கடந்த பிப்ரவரியில் தகவல்கள் வந்தன. வடகொரிய அரசு இதுவரை கொரோனா பரவல் குறித்து பேசவில்லை. இதனால் ஊடகங்கள் இல்லாத இரும்புத்திரை நாடான வட கொரியாவின் உண்மை நிலை என்னவென்று இதுவரை உலக மக்களுக்குத் தெரியவில்லை.

Exit mobile version