74-வது சுதந்திர தினத்தையொட்டி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மக்களுக்கு இதயம் கனிந்த வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆங்கிலேயர்களிடமிருந்து நம் தாய் திருநாட்டிற்கு விடுதலை பெற்றுத் தந்திட தங்கள் இன்னுயிரை நீத்த பல்லாயிரக்கணக்கான சுதந்திர போராட்ட வீரர்களின் தியாகத்தைப் போற்றும் நன்னாளாக இச்சுதந்திரத் தினம் விளங்குவதாக குறிப்பிட்டுள்ளார். சுதந்திரத்திற்காகப் போராடிய தியாகிகளை போற்றி பெருமைப்படுத்தும் வகையில், விடுதலை போராட்டத் தியாகிகளுக்கு வழங்கி வரும் மாதாந்திர ஓய்வூதியத்தை 16 ஆயிரம் ரூபாயாகவும், அவர்களது வாரிசுதாரர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியத்தை 8 ஆயிரம் ரூபாயாகவும் உயர்த்தியுள்ளதை முதலமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த இனிய நாளில், நமது தாய் திருநாட்டை அனைத்துத் துறைகளிலும் முன்னேறி, வல்லரசு நாடாக உயர்த்திடவும், தமிழ்நாட்டை இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக தொடர்ந்து திகழ செய்திடவும் மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து பாடுபட வேண்டும் என முதலமைச்சர் கேட்டுக் கொண்டுள்ளார். அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை தனது உளமார்ந்த சுதந்திரத் திருநாள் நல்வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்வதாகவும் முதலமைச்சர் கூறியுள்ளார்.