காவிரி படுகையில் சிறப்பு வேளாண் மண்டலத்தை பற்றி மு.க.ஸ்டாலின் செய்து வரும் கோயபல்ஸ் பொய் பிரசாரத்திற்கும், முதலமைச்சரை தரம் தாழ்ந்து அரசியல் நாகரீகமற்ற முறையில் பேசியதற்கும் அம்மா பேரவை சார்பில் வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஏழரை கோடி மக்களை கொண்ட தமிழ்நாட்டை முதன்மை இடத்திற்கு உயர்த்தி நல்லாட்சி நடைபெறும் நாடு அன்னை தமிழ்நாடு என இந்திய தேசமே பாராட்டும் நிலையை உருவாக்கியவர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி என அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் குறிப்பிட்டுள்ளார்.
ஒரே ஆண்டில் 11 மருத்துவக் கல்லூரிகள் அமைத்து, மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கொண்டு வந்து, ஜல்லிக்கட்டு உரிமையை மீட்டு, தொழில் முதலீட்டை ஈர்க்க வெளிநாடுகளுக்கு சென்று, மக்களின் கோரிக்கையை நிலுவையில் வைக்காமல் 5 புதிய மாவட்டங்களை உருவாக்கியவர் முதலமைச்சர் என்றும் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் சாதனைகளை பொறுத்து கொள்ள முடியாமல், அரசியல் காழ்புணர்ச்சி காரணமாக எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் உளறி வருவதை நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள் என குறிப்பிட்டுள்ள அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், டெல்டா பகுதியை சிறப்பு வேளாண் மண்டலமாக உருவாக்க சட்ட வல்லுநர்கள் மூலம் தனி சட்டத்தை உருவாக்கி முதலமைச்சர் சாதித்து காட்டுவார் என கூறியுள்ளார்.
கருணாநிதியின் மகன் என்ற ஒற்றை தகுதியை மட்டும் வைத்து கொண்டு தமிழினத்திற்கு தலைவராக வேண்டும் என்ற பேராசை வெறியோடு, பதவி பசியோடு, நாற்காலிக்காக அலைந்து திரிகிற மனிதராக ஸ்டாலின் செயல்பட்டு வருவதாக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விமர்சித்துள்ளார்.
நல்லதை பாராட்ட மனமில்லாமல் போனாலும், அவதூறு செய்கின்ற, பழி சுமத்துகின்ற குணத்தையாவது ஸ்டாலின் மாற்றி கொண்டால் மட்டுமே தமிழக மக்கள் ஸ்டாலினை மனிதராக ஏற்றுகொள்வர் என அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் குறிப்பிட்டுள்ளார். விவசாயிகள் மீது அக்கறையோ, தமிழகத்தின் வளர்ச்சிக்கான முயற்சியோ ஸ்டாலினிடம் இல்லை என்பதையே அவரது பொய் பிரச்சாரம் எடுத்து காட்டுவதாக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் குறிப்பிட்டுள்ளதுடன், ஸ்டாலினுக்கு எதிராக அம்மா பேரவை தீர்மானம் நிறைவேற்றி உள்ளது.