முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அரசு பொறுப்பேற்று இரண்டாண்டுகள் நிறைவடைந்தநிலையில், தமிழகத்தின் குட்டி ஜப்பான் என்று அழைக்கப்படும் திருப்பூர் மாவட்டம் இந்த இரண்டு ஆண்டுகளில் பெற்ற வளர்ச்சி மற்றும் முன்னேற்றம் குறித்து விளக்குகிறது இந்த செய்தி தொகுப்பு…..
சென்னை, கோவை, மதுரை போன்ற மாவட்டங்களுக்கு இணையாக தொழில் துறையிலும், விவசாயத் துறையிலும் முதன்மை மாவட்டமாக திருப்பூர் மாவட்டம் விளங்குகிறது. இந்த சாதனைகள கடந்த 8 ஆண்டுகளாக ஆட்சி நடத்திக் கொண்டிருக்கும் அதிமுகவால் ஏற்பட்ட வளர்ச்சியாகும். குறிப்பாக கடந்த இரண்டு வருடங்களாக தொழில்துறையில் வளர்ச்சிக்கு முக்கிய பங்காக தமிழக அரசு விளங்குகிறது.
திருப்பூர் என்றாலே பின்னலாடை துறை ஒரு அங்கமாகவே காணப்படுகிறது. பின்னலாடை துறையில் நிட்டிங், டையிங், ஆயத்த ஆடைகள் ஏற்றுமதி, இறக்குமதி, பனியன் உற்பத்தி போன்ற பல பிரிவுகள் உள்ளன. இந்தநிலையில் நாடு முழுவதும் ஜிஎஸ்டி வரி அமல்படுத்தப்பட்ட போது, 18 சதவீத ஜிஎஸ்டியால் பலர் சொந்த நிறுவனங்களை மூடும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.
அப்போது திருப்பூருக்கு சென்ற முதலமைச்சரை தொழில்துறையினர் சந்தித்து முறையிட்டதை தொடர்ந்து அவர்களுக்கு ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைக்கப்பட்டது. இதன் மூலம் பலரது வாழ்வாதாரத்தை காப்பாற்றிய முதலமைச்சருக்கு பின்னலாடை நிறுவன உரிமையாளர்கள் நன்றிகளை தெரிவித்துள்ளனர்.
கோவை, திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களை சேர்ந்த ஐம்பது லட்சம் மக்களின் 60 ஆண்டுகால வாழ்வாதார கோரிக்கையான அத்திக்கடவு – அவிநாசி திட்டத்திற்கு 1000 கோடி ரூபாய் பட்ஜெட்டில் நிதி ஒதுக்கி சட்டமன்றத்தில் தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளதற்கு பொதுமக்கள் நன்றிகளை தெரிவித்துள்ளனர்.