பிசான சாகுபடிக்காக, நெல்லை மாவட்டத்தில் உள்ள 4 நீர்த்தேக்கங்களில் இருந்து தண்ணீர் திறந்து விட, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நெல்லை மாவட்டத்தில் உள்ள கடனா, அடவிநயினார்கோவில், இராமநதி மற்றும் கருப்பாநதி நீர்த்தேக்கங்கள் முழுக்கொள்ளளவை எட்டியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். பிசான சாகுபடிக்காக 4 நீர்த்தேக்கங்களில் இருந்தும் தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளதாக முதலமைச்சர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, பிசான சாகுபடிக்காக 4 நீர்த்தேக்கங்களில் இருந்தும் வரும் 26-ம் தேதி முதல் அடுத்த ஆண்டு மார்ச் 29-ம் தேதி வரை 125 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விட உத்தரவிட்டுள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டுள்ளார். தண்ணீர் திறப்பால் சுமார் 32 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்று குறிப்பிட்டுள்ள முதலமைச்சர், நீரை சிக்கனமாக பயன்படுத்தி அதிக மகசூல் பெற வேண்டும் என விவசாயிகளை கேட்டுக்கொண்டுள்ளார்.