மாநகராட்சி பகுதிகளில் உள்ள சிறிய மத வழிபாட்டுத் தலங்களை வரும் 10ஆம் தேதி முதல் திறக்க அனுமதி அளிக்கப்படுவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
கோயில்கள் திறப்பு குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா தொற்றில் இருந்து பொதுமக்களை பாதுகாத்து, தேவையான தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு தமிழக அரசு முனைப்புடன் செயல்பட்டு வருவதாக குறிப்பிட்டுள்ளார். அரசு ஏற்கனவே வெளியிட்டுள்ள நிலையான வழிகாட்டி நடைமுறைகளை பின்பற்றி, சென்னை உள்ளிட்ட மாநகராட்சிகளில் உள்ள மத வழிபாட்டு தலங்களை வரும் 10ம் தேதி முதல் திறக்க அனுமதி அளிக்கப்படுவதாகவும், 10 ஆயிரம் ரூபாய்க்கும் குறைவான ஆண்டு வருமானம் கொண்ட திருக்கோயில்கள், சிறிய மசூதிகள், தேவாலயங்களில் மாவட்ட ஆட்சியர் அனுமதியுடன் பொதுமக்கள் தரிசனத்துக்கு அனுமதி அளிக்கப்படுகிறது எனவும் குறிப்பிட்டுள்ளார். சென்னை மாநகராட்சி பகுதியில் இதற்கான அனுமதியை, மாநகராட்சி ஆணையரிடம் பெற வேண்டும் எனவும், பிற மாநகராட்சி பகுதிகளில் இதற்கான அனுமதியை சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியரிடம் பெற வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.
அரசு வெளியிடும் நிலையான வழிகாட்டி நடைமுறைகளை பின்பற்றி, தமிழ்நாடு முழுவதும் ஓட்டுநர் பயிற்சி பள்ளிகள் வரும் 10ம் தேதி முதல் செயல்பட அனுமதிக்கப்படுவதாகவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.