தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு தொகுதியில் போட்டியிடும் அதிமுக கூட்டணி கட்சி பாஜக வேட்பாளர் பூண்டி வெங்கடேசனை ஆதரித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாக்கு சேகரித்தார்.
அப்போது பேசிய முதலமைச்சர், அதிமுக அரசு12 ஆயிரத்து 110 கோடி ரூபாய் பயிர்க்கடனை தள்ளுபடி செய்துவிட்ட நிலையில், அதனை தேர்தல் அறிக்கையில் சேர்த்து திமுக மக்களை ஏமாற்றுவதாக முதலமைச்சர் குற்றம்சாட்டியுள்ளார்.
சுமார் 80 ஆயிரம் கோடி செலவிலான காவிரி – கோதாவரி இணைப்பு திட்டத்திற்கு பிரதமர் மோடி ஒப்புதல் அளித்துள்ளதாகவும், மீண்டும் அதிமுக ஆட்சி அமைந்த உடன் திட்டம் வெற்றிகரமாக நிறைவேற்றப்படும் என்றும் தெரிவித்தார்.
காவிரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்தது அதிமுக அரசு என்றும் குறிப்பிட்டார்.
பாபநாசம் தொகுதி அதிமுக வேட்பாளர் கோபிநாதனை ஆதரித்து வாக்கு சேகரித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, இந்தியாவிலேயே, பயிர் காப்பீட்டு திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு அதிக இழப்பீட்டை பெற்றுத் தந்தது அதிமுக அரசு எனக் குறிப்பிட்டார்.
குடிமராத்து பணிகள் மூலம் ஏரிகள், குளங்களில் தண்ணீர் சேமிக்கப்பட்டுள்ளதால், கர்நாடகத்தை நம்பி இருக்க வேண்டிய அவசியம் இனி இருக்காது என்பதையும் சுட்டிக்காட்டினார்.
ஏற்கனவே தள்ளுபடி செய்யப்பட்ட பயிர்க்கடனை தள்ளுபடி செய்யப்படும் என திமுக தேர்தல் அறிக்கையில் தெரிவித்து மக்களை ஏமாற்றுவதாக முதலமைச்சர் குற்றம்சாட்டியுள்ளார்.
பின்னர், கும்பகோணம் அதிமுக கூட்டணி கட்சியான மூவேந்தர் முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளர் ஸ்ரீதர் வாண்டையாரை ஆதரித்து இரட்டை இலை சின்னத்திற்கு முதலமைச்சர் வாக்கு சேகரித்தார்.
அதிகாரம் முக்கியம் என்பதால் மத்தியில் காங்கிரஸ் கொண்டு வந்த நீட் தேர்வை அப்போதைய திமுக அரசு எதிர்க்கவில்லையென முதலமைச்சர் குற்றம்சாட்டினார்.
முன்னதாக தமிழ்நாடு முத்தரையர் முன்னேற்ற சங்கத் தலைவரின் மருமகனும், திருச்சி மாநகர் மாவட்ட ரஜினி மக்கள் மன்றத்தின் தலைவருமான ரவிசங்கர் தலைமையில் 500க்கும் அதிகமானோர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் தங்களை இணைத்து கொண்டனர்.