பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாளை ஒட்டிக் காவல்துறை, சீருடைப் பணி அதிகாரிகள், பணியாளர்கள் 130 பேருக்கு அண்ணா பதக்கங்களை வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில் காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப்பணித்துறை அலுவலர்களுக்கு ஆண்டுதோறும் செப்டம்பர் 15ஆம் தேதி அண்ணா பதக்கங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் இந்த ஆண்டு காவல்துறை, தீயணைப்புத் துறை, சிறைத்துறை, ஊர்க்காவல்படை, விரல்ரேகைப் பிரிவு, தடய அறிவியல் துறை ஆகியவற்றைச் சேர்ந்த மொத்தம் 130 அலுவலர்களுக்கு அண்ணா பதக்கங்கள் வழங்கிட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆணையிட்டுள்ளார். தமிழக முதலமைச்சரின் வீரதீரச் செயலுக்கான காவல் பதக்கம் மணல் திருட்டைத் தடுக்கும் போது தன்னுயிர் நீத்த ஜெகதீஷ் துரை என்ற முதல்நிலைக் காவலரின் குடும்பத்திற்கு வழங்கப்பட உள்ளது. இந்தப் பதக்கங்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பின்னர் நடைபெறும் விழாவின் போது வழங்கவுள்ளார்.