சென்னை தரமணியில் பூட்டிய வீட்டில் 14 லட்சம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்து தப்பி சென்ற ஆசாமிகளை தனிப்படை காவல்துறையினர் கைது செய்தனர்.
ராஜா மொய்தீன் என்பவர் தனது குடும்பத்துடன் தரமணியில் வசித்து வருகிறார். கடந்த அக்டோபர் 3ஆம் தேதி குடும்பத்துடன் கோவளம் சென்று விட்டு வீடு திரும்பி நிலையில், வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். காவல்துறையினர் நடத்திய விசாரணையில் 14 லட்சம் ரூபாய், 9 சவரன் நகைகள் காணாமல் போனது தெரிய வந்தது. வழக்குப் பதிவு செய்து, சிசிடிவி காட்சி உதவியுடன் தனிப்படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இந்தநிலையில், கொள்ளையர்கள் விழுப்புரம் மாவட்டம் திருக்கனூரில் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில், அங்கு விரைந்த தனிப்படையினர் சையது, முகமது அப்துல்லா, முகமது ஆசிப் ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 5 லட்சத்து 15 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. மூவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.