விடிய விடிய கொட்டித் தீர்த்த கனமழையால் சென்னை கத்திப்பாரா பாலத்தின் கீழ் உள்ள சுரங்க பாதையில் தேங்கிய மழை நீரில் சொகுசு கார் ஒன்று சிக்கியது.
சென்னையில் விடிய விடிய பெய்த கனமழையால் பல்வேறு இடங்களில் மழை நீர் சுரங்கப்பாதைகளில் தேங்கியுள்ளது. கத்திப்பாரா மேம்பாலத்தின் கீழ் ஒவ்வொரு பருவ மழையின் போதும் சுரங்கப்பாதைகளில் தண்ணீர் தேங்குவது தொடர்கதையாகி வருகிறது. அந்த வகையில் சென்னை ஜிஎஸ்டி சாலையிலிருந்து கத்திப்பாரா மேம்பாலம் வழியாக வடபழனி நோக்கி செல்லும் சுரங்க பாதையில் மழை நீர் தேங்கியுள்ளது. இது குறித்து எச்சரிக்கை தடுப்புகள் எதுவும் இல்லாததால், அவ்வழியாக சென்ற சொகுசு கார் ஒன்று தண்ணீரில் சிக்கியது. இதில் பயணித்த பயணிகள் உட்பட அனைவரும் செய்வதறியாது தவித்தனர். மேலும் சுரங்க பாதையில் சிக்கிய வாகனத்தை வெளியே எடுக்க முடியாமல் வாகன ஓட்டியும் தவித்தார். சுரங்கப்பாதையில் தேங்கும் தண்ணீரை வெளியேற்றும் வகையில் பொருத்தப்பட்ட மின் மோட்டார் முறையாக இயங்காததால், ஒவ்வொரு பருவ மழையின் போதும் இதுபோன்று சுரங்கப்பாதைகளில் தண்ணீர் தேங்குவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
Discussion about this post