சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கு தொடர்பாக மேற்கு வங்க காவல் ஆணையர் ராஜீவ் குமாரிடம் சிபிஐ அதிகாரிகள் மூன்றாவது நாளாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேற்கு வங்கம் மற்றும் ஒடிசா மாநிலங்களில் நடைபெற்ற சாரதா நிதி நிறுவன மோசடி தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. இவ்வழக்கு தொடர்பாக கொல்கத்தா மாநகர காவல் ஆணையர் ராஜீவ்குமாரிடம் விசாரணை நடத்த சிபிஐ முயன்ற போது மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கடுமையாக எதிர்த்தார். இதுதொடர்பாக தர்ணா போராட்டத்திலும் அவர் ஈடுபட்டார்.
இந்த நிலையில் ராஜிவ் குமாரை கைது செய்யக்கூடாது என்ற நிபந்தனையுடன் அவரிடம் விசாரணை நடத்த உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்தது. இதையடுத்து மேகாலயா மாநிலம் ஷில்லாங் நகரில் சிபிஐ அதிகாரிகள் முன்பு கொல்கத்தா காவல் ஆணையர் ராஜீவ்குமார் ஆஜரானார். சாரதா சிட்பண்ட் ஊழல் வழக்கு தொடர்பாக கடந்த 2 நாட்களாக சிபிஐ அவரிடம் விசாரணை நடத்தி வந்த நிலையில், மூன்றாவது நாளாக இன்றும் அவர் விசாரணைக்கு ஆஜரானார். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.