உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவைப்பொறுத்தவரை 100க்கும் மேற்பட்டோர் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நோய் தாக்கம் தமிழகத்தில் குறைவாகவே உள்ளது. இருந்தபோதிலும், நோய் தொற்று பரவாமல் தடுப்பதற்கான பல்வேறு நடவடிக்கைகளை தமிழக சுகாதாரத்துறை முன்னெடுத்து வருகிறது.
இந்நிலையில் `இந்த மெத்தையை வாங்கினால், கொரோனாவிலிருந்து தப்பிக்கலாம். ஆன்டி கொரோனா மெத்தை’ என்று மும்பையில் செய்தித்தாள் ஒன்றில் விளம்பரம் வெளியானது. இந்த விளம்பரத்தை பார்த்தவர்கள் தங்கள் மொபைல் போனில் புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். உடனே இந்த விளம்பரம் வைரலானது. இந்த விளம்பரத்தைப்பார்த்த பலரும் சமூக வலைதளங்களில் சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் புகார் தெரிவித்துள்ளனர். புகைப்படம் வைரலானதையடுத்து, மகாராஷ்டிரா மாநிலம் புனேவைச்சேர்ந்த கடையின் உரிமையாளர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மருத்துவர்கள் கொரோனாவை குணப்படுத்துவதற்கான ஆய்வுகள் மேற்கொண்டுவரும் நிலையில், இது போன்ற பொய்யான தகவல் பரப்பிவருபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், இது போன்ற சூழலை பயன்படுத்திக்கொண்டு வியாபாரத்தை பெருக்கும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து வருகிறது.