காஞ்சிபுரம் அத்திவரதர் வைபவத்தில் வருகிற 16 மற்றும் 17ஆம் தேதிகளில் விஐபி தரிசனம் ரத்து செய்யப்படுவதாக மாவட்ட ஆட்சியர் பொன்னையா தெரிவித்துள்ளார்.
அத்திவரதரை தரிசிக்க நாளுக்கு நாள் லட்சக்கணக்கான பக்தர்கள் காஞ்சிபுரத்திற்கு படையெடுத்து வருகின்றனர். கடந்த 35 நாட்களில் சுமார் 50 லட்சத்திற்கும் மேற்பட்டோர் அத்திவரதரை தரிசித்து சென்றுள்ளனர். வருகிற 17 ஆம் தேதி வரை மட்டுமே அத்திவரதரை தரிசிக்க முடியும் என்பதால் இனி வரும் நாட்களில் கூட்டம் அலைமோதும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் தரிசனத்திற்கு 2 நாட்கள் கூட ஆகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், 16 மற்றும் 17 ஆகிய நாட்களில் விஐபி தரிசனம் ரத்து செய்யப்படுவதாக மாவட்ட ஆட்சியர் பொன்னையா தெரிவித்துள்ளார். 16 ஆம் தேதி காஞ்சிபுரத்தில் உள்ள பள்ளிகளுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால் கூட்டம் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அத்திவரதர் தரிசனத்தின் இறுதிநாளான 17 ஆம் தேதி நண்பகல் 12 மணிக்கு கிழக்கு கோபுர வாசல் அடைக்கப்படும் என்றும், கோயிலுக்குள் உள்ளே இருக்கும் பக்தர்கள் மட்டும் மாலை 5 மணி சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என ஆட்சியர் பொன்னையா கூறியுள்ளார். அதன்பிறகு ஆகம விதிகளுக்கு உட்பட்டு அத்திவரதர் மீண்டும் அனந்த சரஸ் குளத்தில் வைக்கப்படுவார் என்றும் ஆட்சியர் கூறினார்.