தரங்கம்பாடி அருகே தொழில்போட்டி காரணமாக கட்டிய கணவரையே, மகன், மருமகன் துணையுடன் கொலை செய்த மனைவி. பொறையார் போலீசார் 3 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
நாகை மாவட்டம் தரங்கம்பாடியை அடுத்த புதுப்பேட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் மதியழகன் . மீனவரான இவர் தரங்கம்பாடி மெயின் ரோட்டில் மேடை அலங்கார கடை நடத்தி வந்தார். இவருக்கும் விஜயலட்சுமி என்பவருக்கும் கடந்த 22 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி மோனிஷா என்ற மகளும் வருண், விமல் என்ற 2 மகன்களும் உள்ளனர். கணவன், மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் இருவரும் கடந்த 5 வருடங்களுக்கு முன்பு பிரிந்து விட்டனர். இதன்காரணமாக தனது பிள்ளைகளுடன் விஜயலட்சுமி தனியே வசித்து வருகிறார்..
அதேபகுதியில் தனது கணவன் செய்து வந்த தொழிலான, மேடை அலங்கார கடையை விஜயலட்சுமியும் நடத்திவந்துள்ளார்.
ஆனால், விஜயலெட்சுமி புதிதாக தொடங்கிய மேடை அலங்காரக்கடையில் சரிவர வியாபாரம் நடக்காமல் உள்ளது. இதனால் பொறாமை கொண்ட விஜயலட்சுமி, தனது கணவரின் வாகனத்தை தீ வைத்து கொளுத்தியுள்ளார்.
இதுகுறித்து மதியழகன் பொறையார் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். தனது குடும்பத்தார்தான் இருசக்கர வாகனத்தை கொழுத்தியது என்று தெரிந்ததால் நடவடிக்கை வேண்டாம் என்று காவல்துறையில் மதியழகன் சொன்னதாக கூறப்படுகிறது.
இதையடுத்து, ஆவணி மாதம் மதியழகனுக்கு ஒன்றேகால் லட்சத்துக்கு மேல் ஆர்டர் வந்துள்ளது. ஆனால் விஜயலட்சுமி எந்த ஒரு ஆர்டரும் இல்லாமல் இருந்துள்ளார். இதனால் பொறாமை கொண்டு, தனக்கு தொழிலில் போட்டியாக உள்ள தனது கணவரையே கொலை செய்ய திட்டம் தீட்டியுள்ளார் விஜயலட்சுமி .
இந்நிலையில், செப்டம்பர் 26ம் தேதி இரவு வழக்கம்போல் தனது கடையை பூட்டிவிட்டு இருசக்கர வாகனத்தில் கிளம்பிய மதியழகன், செப்.27-ஆம் தேதி அதிகாலை வெள்ளக்கோயில் என்ற இடத்தில் முகம் சிதைந்த நிலையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த பொறையாறு போலீசார் மதியழகன் உடலைக் கைப்பற்றி மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்து, நடந்தது விபத்தா? அல்லது கொலையா? என்ற கோணத்தில் விசாரணையை தொடங்கினர்.
இதையடுத்து, தனது மகனின் சாவுக்கு மருமகள் விஜயலட்சுமி தான் காரணமாக இருக்க முடியும் என்று மதியழகனின் தாயார் வள்ளியம்மை அளித்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்திய போலீசார், கைரேகை நிபுணர்களை வரவழைத்து சோதனை மேற்கொண்டனர். விஜயலட்சுமி, அவரது இளைய மகன் விமல் ஆகியோரிடமும் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையின் முடிவில், விஜயலெட்சுமியின் சதித்திட்டத்தின் மூலமே மதியழகன் கொல்லப்பட்டது தெரியவந்தது. வாழ்க்கையில் தன்னைவிட்டு பிரிந்து சென்ற மதியழகன், தொழிலிலும் தனக்கு போட்டியாக வந்ததை பொறுத்துக்கொள்ள முடியாத விஜயலெட்சுமி, தனது இளைய மகன் விமலிடம் இரும்பு கம்பியை கொடுத்து அவனது தந்தையை கொல்லச்சொல்லி அனுப்பியுள்ளார். விஜயலட்சுமியின் அண்ணன் மகன் சத்திரியன் இருசக்கர வாகனத்தை ஓட்ட, பின்னால் ஹெல்மெட் அணிந்து முகத்தை மறைத்தவாறு, தந்தையை பின்தொடர்ந்து சென்ற விமல், ஆள்நடமாட்டம் இல்லாததை பயன்படுத்தி, இரும்புக் கம்பியால் மதியழகனின் பின்புறம் தாக்கியுள்ளார்.
இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த மதியழகனின் முகத்தை இரும்பி கம்பியால் தாக்கி சிதைத்துள்ளார். மதியழகன் இறந்ததை
உறுதிப்படுத்திய பின்னர் இருவரும் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர்.இதையடுத்து, விஜயலெட்சுமி, மகன் விமல், தம்பி சத்ரியன் ஆகிய மூவரையும் கைது செய்த பொறையார் போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.