கர்நாடகா முதலமைச்சர் பதவியை எடியூரப்பா ராஜினாமா செய்தார்.
ஆளுநரை நேரில் சந்தித்து ராஜினாமா கடிதத்தை எடியூரப்பா வழங்கினார்.
கர்நாடக முதலமைச்சராக பதவியேற்று இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், முதலமைச்சர் பதவியை எடியூரப்பா ராஜினாமா செய்துள்ளார்.
பெங்களூரு சௌதாவில் நடைபெற்ற விழாவில் பேசிய எடியூரப்பா, கட்சி தலைமையின் முடிவுக்கு ஏற்ப தமது பதவியை ராஜினாமா செய்வதாக கண்ணீர் மல்க அறிவித்தார்.
முதலமைச்சர் பதவிக்கு தாம் எப்போதும் ஆசைப்பட்டதில்லை என எடியூரப்பா தெரிவித்தார். கட்சியில் விஸ்வாசமாக நடந்து கொண்டதால் முதலமைச்சர் பதவி தம்மை தேடி வந்ததாக குறிப்பிட்ட அவர், பதவியில் இருந்த வரை மக்களுக்கு உண்மையாக நடந்து கொண்டதாக தெரிவித்தார்.
முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்ததாலும், கட்சியின் வளர்ச்சிக்காக தொடர்ந்து பணியாற்றுவேன் என்றும் எடியூரப்பா தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து, ஆளுநர் மாளிகைக்கு நேரில் சென்ற எடியூரப்பா தமது ராஜினாமா கடிதத்தை வழங்கினார்.
ஆளுநரை சந்தித்து பிறகு செய்தியாளர்களிடம் பேசிய எடியூரப்பா, தமது ராஜினாமா கடிதத்தை ஆளுநர் ஏற்றுக் கொண்டதாக தெரிவித்தார்.
பிரதமர் மோடி, அமித் ஷா, ஜே.பி.நட்டா ஆகியோர் நன்றி தெரிவிப்பதாக கூறிய எடியூரப்பா, 2 ஆண்டுகளில் பதவியை ராஜினாமா செய்வேன் என்று வாக்குறுதியை தாம் நிறைவேற்றியுள்ளதாக தெரிவித்தார்.