தஞ்சை அருகே செங்கல் சூளையில் கொத்தடிமைகளாக வேலைபார்த்து வந்த 50க்கும் மேற்பட்டோரை கொத்தடிமை மீட்புத் துறையினர் மீட்டனர்.
பாபநாசத்தை அடுத்த தேவன்குடி, செங்கல்சூளையில் கொத்தடிமைகளாக சிலர் வேலை பார்ப்பதாக வருவாய் துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்ட அதிகாரிகள், செங்கல் சூளையில், குறைந்த சம்பளத்திற்கு அடிமையாக வேலை பார்த்து வந்த 50க்கும் மேற்பட்டோரை மீட்டனர்.
இவர்களில், பலர் 15 வருடங்களுக்கும் மேலாக கொத்தடிமைகளாய் வேலை பார்த்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதையடுத்து அனுமதியின்றி செங்கல் சூளை நடத்திய சேகர் ,மணி, ராஜு ஆகிய மூன்று பேர் மீதும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும் கொத்தடிமைகளாக நடத்தப்பட்டவர்களுக்கு அரசின் உதவி தொகையை பெற்றுத் தரவும் ஏற்பாடு செய்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.