போபர்ஸ் பீரங்கி ஊழல் குறித்த மேல் முறையீட்டு வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.
ஸ்விடன் நாட்டின் போபர்ஸ் நிறுவனத்திடம் இருந்து 1986-ம் ஆண்டு அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்தி தலைமையிலான காங்கிரஸ் அரசால் இந்தியாவிற்கு பீரங்கிகள் வாங்கப்பட்டது. பாகிஸ்தானுக்கு எதிரான கார்கில் போரில் பங்காற்றிய போபர்ஸ் பீரங்கிகள் வாங்கியதில் இந்தியாவில் முக்கிய அரசியல் பிரமுகர்களுக்கு சுமார் ரூ.64 கோடி அளவில் லஞ்சம் வழங்கப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டது.
ஸ்வீடன் நாட்டு வானொலியில் இதுபற்றிய செய்தி வெளியானதால் இந்தியாவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனையடுத்து 1990-ம் ஆண்டு சி.பி.ஐ டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. வழக்கை விசாரித்த டெல்லி உயர் நீதிமன்றம் கடந்த 2005ம் ஆண்டு அனைத்து குற்றச்சாட்டுகளையும் ரத்து செய்து தீர்ப்பளித்தது.
தீர்ப்பு வெளியான 5 மாதங்களுக்குப் பிறகு உச்ச நீதிமன்றத்தில் பாஜக மூத்த தலைவர் அஜய் அகர்வால் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார்.
பல ஆண்டுகலாக கிடப்பில் போடப்பட்டிருந்த மனுவை உச்ச நீதிமன்றம் கடந்த செப்டம்பர் மாதம் விசாரணைக்கு ஏற்பதாக அறிவித்தது. இதனால் போபர்ஸ் வழக்கானது மீண்டும் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டது. மிகவும் பரபரப்பாக பேசப்படும் இந்த வழக்கின் விசாரணை உச்சநீதிமன்ற புதிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வருகிறது.