தேர்தலின்போது அளித்த வாக்குறுதிகளை பாஜக அரசு நிறைவேற்றி வருவதாகப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
ஜார்க்கண்ட் மாநிலச் சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி தன்பாத்தில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசினார். அப்போது நாடு முழுவதும் உள்ள மக்கள் பாஜக அரசு மீது பெரும் நம்பிக்கை வைத்துள்ளதாகத் தெரிவித்தார். தேர்தலின்போது அளித்த வாக்குறுதிகளை பாஜக அரசு நிறைவேற்றுவதாலேயே மக்களின் நம்பிக்கையைப் பெற முடிந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அயோத்தி பிரச்சனைக்கு அமைதியான முறையில் தீர்வு காணப்படும் என அளித்த வாக்குறுதி நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். அயோத்தி பிரச்சனையைத் தீர்ப்பதற்கு ஒரு தடைக்கல்லாக காங்கிரஸ் கட்சி இருந்ததாகவும் மோடி குற்றஞ்சாட்டினார். உச்சநீதிமன்றத் தீர்ப்பின் மூலம் அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கு வழி பிறந்துள்ளதாகவும் மோடி தெரிவித்தார்.