கடன் வாங்கும் வாடிக்கையாளருக்கு வட்டி தரும் வங்கி..

கடன் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு வட்டியையும் வங்கியே தருகிறது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா..?, அப்படிச் சில வங்கிகளைப் பற்றிய சிறப்பு தொகுப்பு.

வங்கிகளுக்குப் புகழ்பெற்ற டென்மார்க் நாட்டின் மூன்றாவது பெரிய வங்கியாக ஜஸ்க் வங்கி (Jyske Bank) உள்ளது. இந்த வங்கி, உலக வரலாற்றில் முதன்முறையாக தனது வாடிக்கையாளர்களுக்கு தானே வட்டி வழங்கும் திட்டத்தை அறிவித்து உள்ளது.

இந்தத் திட்டத்தின்படி, ஜஸ்க் வங்கியில் இருந்து, 10 ஆண்டுகள் அல்லது அதற்கு அதிகமான காலத்திற்கு அடமானக் கடன் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு ஆண்டுக்கு 0 புள்ளி 5 சதவீத வட்டியை வங்கியே வழங்குகிறது. இந்த வட்டி ‘நெகடிவ் இண்டரஸ்ட்’ என்று அழைக்கப்படுகிறது. நெகடிவ் வட்டியை வாடிக்கையாளர்களுக்கு வங்கி நேரடியாகக் கொடுக்காது. ஆனால் வாடிக்கையாளர்களின் கடனில் இருந்து இந்த வட்டித் தொகை கழித்துக் கொள்ளப்படும்.

அதாவது, ஜஸ்க் வங்கியில் ஒருவர் 10 ஆயிரம் யூரோக்களை கடன் வாங்கிவிட்டு, அதே 10 ஆயிரம் யூரோவைத் திரும்பிக் கொடுத்தால் அவர் 10 ஆயிரத்து 50 யூரோக்களைத் திருப்பிக் கொடுத்ததாக கணக்கில் வைக்கப்படும். இந்த சலுகை டென்மார்க் நாட்டின் மக்களுக்கு மட்டுமே உண்டு. ஜஸ்க் வங்கியைப் பார்த்து டென்மார்க்கின் நோர்டியா வங்கியும் (nordea bank) 30 ஆண்டுகள் அல்லது அதற்கு மேலான காலத்திற்கு அடமானக் கடன் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு 0 புள்ளி 5 சதவீத வட்டி தருவதாக அறிவித்து உள்ளது.

ஏற்கனவே டென்மார்க்கின் பல வங்கிகளில் அடமானக் கடன்களுக்கு பூஜ்ஜிய வட்டி அமலில் உள்ள நிலையில், டென்மார்க் வங்கிகளின் இந்த அறிவிப்புகள் உலகையே புருவம் உயர்த்த வைத்துள்ளன.

எப்படி டென்மார்க்கின் வங்கிகளால் மட்டும் ’நெகடிவ் இண்டரெஸ்ட்’ கொடுக்க முடிகிறது என்று பார்த்தால், சுவிட்சர்லாந்து, டென்மார்க் – ஆகிய நாடுகளின் வங்கிகளில் உலகப் பணக்காரர்களின் பணம் குவிந்து கிடக்கிறது. டென்மார்க்கின் வங்கிகளில் ஒருவர் பணத்தை இருப்புவைத்தால், அவருக்கு வங்கி வட்டி தருவது இல்லை, வங்கிக்குதான் அந்த வாடிக்கையாளர் வட்டி கட்ட வேண்டும். எனவே வங்கிக்கு செலவுகளும் இல்லை. இப்படித் தொடர்ந்து குவியும் பணம் மக்களுக்குப் பயன்படும் என்றுதான் ஜஸ்க் வங்கி இப்படி ஒரு புதிய திட்டத்தை அறிவித்து உள்ளது.

டென்மார்க் மக்கள் அதிகம் சொத்து சேர்க்கும் போது அவர்களுக்கு வேறுமாதிரியான சிக்கல்கள் ஏற்படுகின்றன. அப்போது அவர்கள் தங்கள் பணத்தை பாதுகாக்க வங்கிகளுக்கு ஆண்டுக்கு 0 புள்ளி 5 அல்லது 0 புள்ளி 6 சதவிகித வட்டியைக் கட்ட வேண்டிய சூழல் உள்ளது.

மக்கள் மிக மகிழ்ச்சியாக வாழும் உலக நாடுகளின் பட்டியலில் டென்மார்க் எப்போதும் முதல் 5 நாடுகளில் ஒன்றாக உள்ளது என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

Exit mobile version