பங்காரு அடிகளார், சின்னப்பிள்ளை உள்ளிட்டோர் குடியரசுத் தலைவரிடம் இருந்து பத்மஸ்ரீ விருது பெற்றனர்

இந்த ஆண்டிற்கான பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டோருக்கு டெல்லியில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், விருதுகளை வழங்கினார். தமிழகத்தை சேர்ந்த பங்காரு அடிகளார், மதுரை சின்னப்பிள்ளை உள்ளிட்ட 7 பேர் பத்மஸ்ரீ விருதுகளை பெற்றனர்.

இந்த ஆண்டிற்கான பத்மஸ்ரீ, பத்ம பூஷண், பத்ம விபூஷண் விருதுகள் கடந்த ஜனவரி 25 ஆம் தேதி அறிவிக்கப்பட்டன. பல்வேறு துறைகளை சேர்ந்த 94 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகள், 4 பேருக்கு பத்ம விபூஷண், 14 பேருக்கு பத்ம பூஷண் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் தமிழகத்தை சேர்ந்த 7 பேர் பத்மஸ்ரீ விருது பெற்றுள்ளனர்.

தமிழகத்தில் ஆன்மிகத்துறையை சேர்ந்த பங்காரு அடிகளார், டேபிள் டென்னிஸ் வீரர் சரத் கமல், பரதநாட்டிய கலைஞர் நர்த்தகி நடராஜ், சமூக சேவகி மதுரை சின்னப்பிள்ளை, மருத்துவத்துறை சேர்ந்த ஆர்.வி. ரமணி மற்றும் அறுவை சிகிச்சை நிபுணர் ராமசாமி வெங்கடசாமி, டிரம்ஸ் இசைக்கலைஞரும் இசையமைப்பாளருமான டிரம்ஸ் சிவமணி ஆகியோர் இந்த ஆண்டிற்கான பத்மஸ்ரீ விருதினை பெற்றுள்ளனர்.

பிரபலங்களான நடிகர் பிரபுதேவா, பாடகர் ஷங்கர் மகாதேவன், கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பிர் உள்ளிட்ட 94 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகள் வழங்கப்படுகின்றன. விருது வழங்கும் நிகழ்ச்சியையொட்டி குடியரசு தலைவர் மாளிகையில் நடைபெற்ற விழாவில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் விருது அறிவிக்கப்பட்டவர்களுக்கு விருதுகளை வழங்கினார். மீதமுள்ள நபர்களுக்கு வரும் 16ம் தேதி நடைபெறும் நிகழ்ச்சியில் விருதுகள் வழங்கப்பட உள்ளன.

இதேபோல பத்மவிபூஷண் விருதுகளை பெற்ற சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த பாடகர் டீஜன் பாய், ஜிபோட்டியை சேர்ந்த இஸ்மாயில் ஓமர் குயல்லே, மகாராஷ்டிராவை சேர்ந்த எல்-அண்ட்-டி நிறுவன அதிபர் அனில்குமார் பணிபாய் நாயக் மற்றம் மேடை நாடக நடிகர் பல்வண்ட் மொரேஷ்வர் புரண்டர் ஆகியோருக்கும் விருதுகள் வழங்கப்பட்டன. மலையாள சூப்பர்ஸ்டார் மோகன்லால் பத்மபூஷண் விருதை பெற்றார்.

Exit mobile version