மே.வங்கத்தில் மத்திய அமைச்சர் மீது தாக்குதல் நடத்திய கல்லூரி மாணவர்கள்

மேற்குவங்க மாநிலம் கொல்கத்தா ஜாதவ்பூர் பல்கலைக் கழக நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வந்த மத்திய அமைச்சர் பாபுல் சுப்ரியோ, SFI மாணவர்களால் தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய சுற்றுச்சூழல்துறை இணையமைச்சரும், மேற்குவங்க மாநிலத்தின் அசோன்சோல் மக்களவைத் தொகுதி எம்.பியுமான பாபுல் சுப்ரியோ கருத்தரங்கு ஒன்றில் பங்கேற்பதற்காக கொல்கத்தா ஜாதவ்பூர் பல்கலைக் கழகத்திற்கு வருகை தந்துள்ளார். வலதுசாரி மாணவர் அமைப்பான அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் ஏற்பாடு செய்த கருத்தரங்கில் கலந்து கொள்ள இடதுசாரி மாணவர் அமைப்புகளான SFI மற்றும் AISA உள்ளிட்ட அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன.

இதனால் கல்லூரி வளாகத்திலேயே நீண்ட நேரம் காத்திருந்த பாபுல் சுப்ரியோ காவல்துறையினரின் உதவியுடன் நிகழ்ச்சியில் பங்கேற்றார். நிகழ்ச்சியில் பங்கேற்று திரும்பிய போது இடதுசாரி மாணவர் அமைப்பு மாணவர்கள் மத்திய அமைச்சரின் முடியைப் பிடித்து இழுத்து தாக்கினர். இதையடுத்து காவல்துறையினர் அமைச்சரை பத்திரமாக மீட்டு அனுப்பி வைத்தனர். இச்சம்பவத்தால் கல்லூரி வளாகத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது.

Exit mobile version