தமிழக மக்களுக்கு ஆயுத பூஜை, விஜயதசமி வாழ்த்து – முதலமைச்சர்

தமிழக மக்கள் அனைவருக்கும் ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி திருநாள் நல்வாழ்த்துகளை முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்துள்ளனர்.

முதலமைச்சர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், வாழ்வின் உயர்வுக்கு அடிப்படையான வீரம், கல்வி மற்றும் செல்வம் ஆகியவற்றை அருள வேண்டி, நவராத்திரி எனப்படும் ஒன்பது திருநாள்களின், முதல் மூன்று நாள்கள் வீரமிகு துர்கா தேவியையும், அடுத்த மூன்று நாள்கள் செல்வம் பொழியும் லட்சுமி தேவியையும், நிறைவாக மூன்று நாள்கள் கல்வி தரும் சரஸ்வதி தேவியையும், மக்கள் பக்தியுடன் போற்றி வழிபடுவது நவராத்திரி விழாவின் சிறப்பு அம்சமாகும்.

செய்யும் தொழிலே தெய்வம் என்பதை உணர்ந்து, மக்கள் தங்கள் தொழில் சார்ந்த கருவிகளை இறைபொருள்களாகப் பாவித்து, தொழில் பெருக அதற்கு பூஜை செய்து, வாழ்வில் வளம் பெற தெய்வத்தை வணங்கிடும் நன்னாள் ஆயுத பூஜை திருநாளாகும்.

விஜயதசமி திருநாளன்று தொடங்கப்படும் செயல்கள் யாவும் வெற்றி பெறும் என்ற நம்பிக்கையுடன், மக்கள் தங்கள் குழந்தைகளுக்கு முதன்முதலாக கல்வியை தொடங்குதல், புதிய தொழில்களை ஆரம்பித்தல் போன்ற புதிய முயற்சிகளை தொடங்கி விஜயதசமி திருநாளை உற்சாகமாகக் கொண்டாடி மகிழ்வார்கள்.

ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி திருநாள்களை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் இந்த நாளில் தமிழக மக்கள் அனைவரும் வாழ்வில் வெற்றி மேல் வெற்றி பெற்று, நலமுடனும், வளமுடனும் வாழ்ந்திட மனமார்ந்த நல்வாழ்த்துகள் என  முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

 

 

Exit mobile version