ராஜ அலங்காரத்தில் காட்சியளித்த காஞ்சி அத்திவரதரை 4 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் வழிபட்டனர்.
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை அத்திவரதர் அருள் பாலிக்கும் வைபவம் நடைபெற்று வருகிறது. நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் அத்திவரதரை வழிபட்டு செல்கின்றனர். 42-வது நாளான நேற்று கத்தரிப்பூ, நீலம், ஆரஞ்சு வண்ண பட்டாடை அணிந்து, ராஜ அலங்காரத்தில் அத்திவரதர் அருள்பாலித்தார்.
விடுமுறை நாள் என்பதாலும், 16ம் தேதி வரை மட்டுமே அத்திவரதரை தரிசிக்க முடியும் என்பதாலும் கூட்டம் அலைமோதியது. தமிழகம் மட்டுமின்றி, கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களில் இருந்தும் பல்லாயிரக் கணக்கானோர் வந்து இறைவனை வழிபட்டனர். சுமார் நான்கு லட்சம் பக்தர்கள் குவிந்ததால் காஞ்சிபுரம் விழாக் கோலம் பூண்டு இருந்தது.
பக்தர்களுக்கு உணவு, குடிநீர், மருத்துவ வசதிகள் சிறப்பாக செய்யப்பட்டுள்ளன. 100க்கும் மேற்பட்ட உணவுக்கூடங்கள் மூலம், உணவு வழங்கப்பட்டது.