காஞ்சிபுரத்தில் அருள் பாலித்து வரும் அத்தி வரதர் மஞ்சள் நிறப் பட்டாடையில் காட்சியளித்து வருகிறார். அவரை திரளான பக்தர்கள் தரிசித்து வருகின்றனர்.
வரதராஜ பெருமாள் கோவிலில், 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் அத்திவரதர் வைபவம், ஜூலை ஒன்றாம் தேதி தொடங்கி வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. இதுவரை 44 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் அத்திவரதரை தரிசனம் செய்துள்ளனர்.
31-வது நாளான இன்று அத்திவரதர் மஞ்சள் நிறப் பட்டாடையில் அருள்பாலித்து வருகிறார். காலை முதலே திரளான பக்தர்கள் அவரை வழிபட்டு செல்கின்றனர். பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை மாவட்ட நிர்வாகம் சிறப்பாக செய்து வருகிறது.
இந்தநிலையில், நாளை முதல் அத்திவரதர் நின்றவாறு பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளார். இதனால், பொது தரிசனத்துக்கான நுழைவு வாயில் நண்பகல் 12 மணி அளவில் மூடப்படும். அதன்பின்னர், கோயில் வளாகத்திற்குள் இருக்கக்கூடிய பக்தர்கள் மட்டும் மாலை 5 மணிவரை தரிசனம் செய்வதற்கு அனுமதிக்கப்படுவர். விஐபி பக்தர்கள் மாலை மூன்று மணி வரை மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சயன கோலத்தில் அத்திவரதரை தரிசித்தவர்களும் நின்ற கோலத்தில் காட்சி தரும் அத்திவரதரை தரிசனம் செய்ய மீண்டும் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதைக் கருத்தில் கொண்டு மாவட்ட நிர்வாகம் பொதுமக்களுக்கு தேவையான வசதிகளை அதிகரித்துள்ளது.