பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் செயல்பட்டு வந்த தீவிரவாத முகாம்களில் திட்டமிட்டபடி இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தியதாக விமானப்படை தளபதி பீரேந்தர் சிங் தனோவா தெரிவித்துள்ளார்.
கோவை மாவட்டம் சூலூரில் விமானப்படை தளபதி பீரேந்தர் சிங் தனோவா செய்தியாளர்களை சந்தித்தார். அப்பொழுது பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் நடத்தப்பட்ட விமானப்படை தாக்குதல் குறித்து யாரிடமும் விளக்க வேண்டிய அவசியம் இல்லை என்று அவர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர் திட்டமிட்டபடி தீவிரவாத முகாம்களை தாக்கியதாக தெரிவித்தார். இதில் எத்தனை பேர் இறந்தார்கள் என்பதை விமானப்படையால் கணக்கிட முடியாது என்றும் அது மத்திய அரசின் வேலை என்றும் சுட்டிக் காட்டினார். மேலும், விமானப்படை தாக்குதல் குறித்து யாரிடமும் விளக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.
இந்திய விமானப்படையில் செப்டம்பர் மாதம் ரபேல் விமானங்கள் இணைக்கப்படும் என்றும் தனோவா தெரிவித்தார். பாகிஸ்தான் ராணுவத்தால் விடுவிக்கப்பட்டு மருத்துவ சிகிச்சை பெற்றுவரும் அபிநந்தனின் உடல்தகுதியை பொருத்து, அவர் விமானங்களை இயக்க அனுமதிக்கப்படுவார் என்றும் அவர் குறிப்பிட்டார்.