பாதுகாப்பு பணியின் போது வீரமரணமடைந்த சேலத்தை சேர்ந்த ராணுவ வீரர் மதியழகனின் மனைவிக்கு, அரசு வேலை வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
சேலம் மாவட்டம் எடப்பாடி வட்டம் வெத்தலைகாரன்காடு கிராமத்தை சேர்ந்த மதியழகன், இந்திய ராணுவத்தின் 17ஆவது மெட்ராஸ் படைப்பிரிவில் பணிபுரிந்து வந்தார். ஜம்மு யூனியன் பிரதேசம் அக்னூர்செக்டார் எல்லைப் பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போது கடந்த 4ஆம் தேதி எதிரிகளின் போர் தாக்குதலில் வீரமரணமடைந்தார். வீரமரணமடைந்த மதியழகனின் தந்தை பெத்தா கவுண்டர், தாயார் ராமாயி அம்மாள், மனைவி தமிழரசி, குழந்தைகள் ரோகித், சுபஸ்ரீ ஆகியோர் எடப்பாடி பயணியர் மாளிகையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து அரசு வேலை வழங்க கோரிக்கை வைத்தனர். மனுவை பெற்றுக் கொண்ட முதலமைச்சர், மதியழகன் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். இதனை தொடர்ந்து, பாதுகாப்புப் பணியில் உயர் தியாகம் செய்த மதியழகனின் மனைவி தமிழரசிக்கு அரசு வேலை வழங்கிட உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள சேலம் மாவட்ட ஆட்சியருக்கு முதலமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.