லடாக் பகுதியில் சாலை விபத்தில் உயிரிழந்த ராணுவ வீரரின் உடல், கோவில்பட்டியில் உள்ள அவரது சொந்த ஊரில் 21 குண்டுகள் முழங்க ராணுவ மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.
இந்திய ராணுவத்தில் கடந்த 14 ஆண்டுகளாக பணியாற்றி வந்த கோவில்பட்டியைச் சேர்ந்த ராணுவ வீரர் கருப்பசாமி, காஷ்மீரின் லடாக் பகுதியில் சாலை விபத்தில் உயிரிழந்தார். மதுரை விமானநிலையத்திற்கு கொண்டு வரப்பட்ட கருப்பசாமியின் உடலுக்கு மாவட்ட ஆட்சியர் அன்பழகன், காவல்துறை கண்காணிப்பாளர், மதுரை தேசிய மாணவர் படையினர், கமாண்டன்ட் கர்னல் ரவிக்குமார், உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.
இதனிடையே, கருப்பசாமியின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ள முதலமைச்சர், குடும்பத்தில் ஒருவருக்கு தகுதியின் அடிப்படையில் அரசு பணி வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.
கருப்பசாமியின் உடல், மதுரை விமான நிலையத்தில் இருந்து சாலை மார்க்கமாக அவரது சொந்த ஊரான கோவில்பட்டி தெற்கு திட்டங்குளத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு அவரது உடலுக்கு அமைச்சர் கடம்பூர் ராஜூ உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர். இதனைத் தொடர்ந்து கருப்பசாமியின் உடல் 21 குண்டுகள் முழங்க அரசு, ராணுவ மரியாதையுடன், அடக்கம் செய்யப்பட்டது.