காஷ்மீர்: பேருந்து நிலையம் அருகே எறிகுண்டு வீச்சு தாக்குதலில் 19 பேர் காயம்

கடந்த ஆகஸ்டு 5 ஆம் தேதி ஜம்மு மற்றும் காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியல் அமைப்பு சட்டத்தின் 370-வது பிரிவை ரத்து செய்து, மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்து மத்திய அரசு அறிவித்தது. இதனால் காஷ்மீரில் அசம்பாவித சம்பவங்கள் நடக்காமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ராணுவம் குவிக்கப்பட்டு, பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

அரசின் முடிவுக்கு எதிராக போராட்டங்களில் ஈடுபடக்கூடும் என்பதால், முன்னாள் முதலமைச்சர்கள் மெகபூபா முப்தி, உமர் அப்துல்லா உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் வீட்டு காவலில் வைக்கப்பட்டனர். எம்.பி.யும் முன்னாள் முதல்வருமான பரூக் அப்துல்லா, பொது பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். காஷ்மீரில் இயல்புநிலை சீரடைந்த பகுதிகளில் மட்டும் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன.

இந்தநிலையில், ஜம்மு மற்றும் காஷ்மீரின் சோப்பூரில் பேருந்து நிலையம் அருகே எறிகுண்டு வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் 19 பேர் காயம் அடைந்தனர். அவர்களில் 6 பேர் தீவிர சிகிச்சைக்காக ஸ்ரீநகருக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Exit mobile version