தஞ்சாவூர் பெரிய கோயிலில் தியான நிகழ்ச்சி நடத்த தனியார் அமைப்புக்கு எதன் அடிப்படையில் அனுமதி அளிக்கப்பட்டது என்பது குறித்து விளக்கம் அளிக்குமாறு மத்திய தொல்லியல் துறைக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
ஆயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்த தஞ்சாவூர் பெரிய கோயிலில் வாழும் கலை அமைப்பின் சார்பில் அதிக கட்டணத்துடன் கூடிய தியான நிகழ்ச்சி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டன. இதற்கான அனுமதியை ரத்து செய்ய கோரி கும்பகோணத்தை சேர்ந்த வெங்கட் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடுத்தார். இதனையடுத்து தனியார் அமைப்பு நிகழ்ச்சிக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை தடை விதித்தது.
இந்தநிலையில் இன்று அந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தஞ்சாவூர் பெரிய கோயிலில் தனியார் அமைப்பு நிகழ்ச்சி நடத்த எதன் அடிப்படையில் அனுமதி வழங்கப்பட்டது என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், இதுகுறித்து விளக்கம் அளிக்குமாறு மத்திய தொல்லியல் துறைக்கு உத்தரவிட்டனர். மேலும் வழக்கு விசாரணை வரும் 13-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.