பழந்தமிழரின் பெருமையை உலகிற்கு பறைசாற்றும் கீழடி

பழந்தமிழரின் பெருமையை உலகறியச் செய்துள்ள கீழடியில் இருந்து நாளுக்கு நாள் பல்வேறு பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன.

மதுரையில் இருந்து சுமார் 20 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள வரலாற்று சிறப்பு மிக்க கீழடி கிராமத்தில் தொல்லியல் துறை அகழாய்வு பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. இங்கு இதுவரை, மத்திய தொல்லியல் துறை 3 கட்டமும், மாநில அரசு 1 கட்டமும் என, 4 கட்ட அகழ்வாய்வு பணிகள் நடந்து முடிந்துள்ள நிலையில் தற்போது, ஐந்தாம் கட்ட அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகிறது.

மத்திய தொல்லியல் துறை 3 கட்டமாக நடத்திய அகழ்வாய்வில் 7,818 பொருட்களும், மாநில அரசு நடத்திய அகழ்வாய்வில் 6 தங்க பொருட்கள் உட்பட 5,820 பொருட்களும் எடுக்கப்பட்டுள்ளன.

தற்போது நடந்துவரும், ஐந்தாவது கட்ட அகழ்வாராய்ச்சியில் இதுவரை 52 குழிகள் தோண்டப்பட்டு 850க்கும் அதிகமான பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளன. இதில் அணிகலன்கள், பானை ஓடுகள், சமையலறைகளில் பயன்படுத்தக்கூடிய பொருட்கள், சதுர வடிவில் செங்கற்களால் ஆன அமைப்பு, சுடுமண் பொம்மைகள், மதில் சுவர்கள், உறை கிணறுகள் மற்றும் இரும்பினால் செய்யப்பட்ட பொருட்கள் அதிகளவில் கண்டறியப்பட்டுள்ளன.

மேலும், இங்கு கண்டெடுக்கப்பட்டுள்ள பானை ஓடுகளில் தமிழ் பிராமி எழுத்துகள், மீன் போன்ற உருவங்கள் காணப்படுவதோடு, எலும்பினால் செய்யப்பட்ட பொருட்களும், பன்றி உருவம் பொறித்த கிண்ணமும் கிடைத்துள்ளன.

இந்த ஐந்தாம் கட்ட அகழ்வாராய்ச்சி பணியில் சுமார் 110 பணியாளர்களும், 11 அகழ்வாராய்ச்சி மாணவர்கள் உட்பட மூன்று அகழ்வராய்ச்சி அலுவலர்களும் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், கீழடியைப் பார்வையிட தற்போது பள்ளி மாணவர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அலை மோதி வருவதால் அங்கு திடீர் உணவகங்களும் முளைத்துள்ளன.

கடந்த சில நாட்களாகவே இங்கு மூவாயிரத்திலிருந்து 4 ஆயிரம் என்ற எண்ணிக்கையில் சுற்றுலா பயணிகள் வந்துகொண்டிருந்த நிலையில், தற்போது அவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்தையும் தாண்டியுள்ளது.

கீழடியைப் பார்வையிட வரும் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால் சிவகங்கை மாவட்ட காவல்துறை சார்பில், சுமார் 30 காவலர்கள் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

தோண்டத் தோண்ட தமிழர்களின் தொன்மையை உலகிற்கு வெளிபடுத்திக் கொண்டிருக்கும் கீழடி அகழாய்வானது, இந்தியாவின் வரலாற்றிலேயே ஒரு மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியுள்ளது என்றால் அது மிகையாகாது…

Exit mobile version